UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 08:32 AM
சென்னை:
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான, டிட்டோ ஜாக் நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தத்தில், 37,479 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான, டிட்டோ ஜாக் அமைப்பினர், மாவட்டத்துக்கு உள்ளேயே பணியிட மாறுதல், பதவி உயர்வில் பணி மூப்பு உள்ளிட்ட, 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் நேற்று ஒரு நாள், அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை, மாவட்டக் கல்வி அலுவலகங்களின் முன், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதன் காரணமாக, ஆங்காங்கே பல பள்ளிகளுக்கு பூட்டு போட்டு விட்டு ஆசிரியர்கள் சென்றனர். பல பள்ளிகளில் மாணவர்களே பாடம் நடத்தினர்.
மொத்தம் உள்ள ஒரு லட்சத்து, 12,343 ஆசிரியர்களில், 30.6 சதவீதமான, 37,479 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை; விடுப்பு எடுத்துள்ளனர் என, தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்தது.
அடுத்தகட்டமாக, வரும் 29, 30, அக்., 1ல், கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக, இந்த அமைப்பினர் அறிவித்து உள்ளனர்.