UPDATED : டிச 28, 2024 12:00 AM
ADDED : டிச 28, 2024 11:20 AM
சென்னை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவர்களின், கல்வி மேம்பாட்டுக்காக, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் செய்வோரின், குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில், கல்லுாரிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே கல்லுாரியில் படித்து வரும், புதுப்பித்தல் மாணவர்கள், கல்வி உதவித் தொகைக்கு, புதிதாக விண்ணப்பிக்கத் தேவை இல்லை.
நடப்பாண்டு கல்லுாரியில் சேர்ந்த, முதலாம் ஆண்டு மாணவர்கள், கடந்த ஆண்டு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லுாரியில், கல்வி உதவித் தொகைக்காக நியமிக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகவும். அவர் வழியே, https://umis..gov.in/ இணைய தளத்தில், உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தொகை பெற, பெற்றோர் ஆண்டு வருமானம், 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 18005997638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க ஜன.,31 கடைசி நாள் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.