அனுமதியின்றி சட்டப்படிப்பு: தனியார் பல்கலை மீது வழக்கு
அனுமதியின்றி சட்டப்படிப்பு: தனியார் பல்கலை மீது வழக்கு
UPDATED : செப் 05, 2025 12:00 AM
ADDED : செப் 05, 2025 10:56 PM
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் பாரபங்கியில் உள்ள ஸ்ரீராம் ஸ்வரூப் நினைவு பல்கலைக்கு எதிராக அனுமதியின்றி சட்டப்படிப்பு நடத்தியதாக மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி.,யின் பாரபங்கியில் உள்ள ஸ்ரீராம் ஸ்வரூப் நினைவு பல்கலையில் அனுமதியின்றி சட்டப்படிப்பு நடத்துவதாக கூறி, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் கடந்த 1ல் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அயோத்தி டிவிஷனல் கமிஷனர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதன்படி உ.பி., உயர் கல்வி கமிஷன் துணை செயலர் தினேஷ் குமார், பாரபங்கி நகர போலீசில் ஸ்ரீராம் பல்கலை மீது புகார் அளித்தார்.
அந்த புகாரில், 'சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்புதல் பெறாமல் கடந்த 2023- - 24 மற்றும் 2024 - -25ம் கல்வி ஆண்டுகளில் சட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தியதுடன், தேர்வும் நடத்தி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடிய ஸ்ரீராம் ஸ்வரூப் நினைவு பல்கலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி அந்த பல்கலை மீது மோசடி, ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.