தெலுங்கானாவிடம் கற்றுக்கொள்ளுங்கள் தி.மு.க.,வுக்கு அன்புமணி அறிவுரை
தெலுங்கானாவிடம் கற்றுக்கொள்ளுங்கள் தி.மு.க.,வுக்கு அன்புமணி அறிவுரை
UPDATED : பிப் 28, 2025 12:00 AM
ADDED : பிப் 28, 2025 09:38 AM
சென்னை:
தாய்மொழிப் பற்றை, தெலுங்கானாவிடம் தி.மு.க., அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தெலுங்கானாவில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, தெலுங்கு கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழை கட்டாய பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 19 ஆண்டுகளாகியும், இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட பாடத்திட்டத்தை பின்பற்றும், தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க தேவையில்லை. இது தமிழ் துரோகம். 'தமிழை கட்டாய பயிற்று மொழியாக்கும் அரசாணை செல்லாது' என, உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை விரைந்து விசாரணைக்கு கொண்டு வர, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை, கேரளம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடம் இருந்து, தமிழக ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இனியும் அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்வதை விடுத்து, தமிழகத்தில் தமிழை கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.