மணற்கேணி செயலியில் பாடம் சார்ந்த வீடியோக்கள்! பதிவிறக்கம் செய்து படிக்க அறிவுரை
மணற்கேணி செயலியில் பாடம் சார்ந்த வீடியோக்கள்! பதிவிறக்கம் செய்து படிக்க அறிவுரை
UPDATED : பிப் 15, 2025 12:00 AM
ADDED : பிப் 15, 2025 10:38 AM

நெகமம்:
நெகமம், மெட்டுவாவி அரசு நடுநிலைப்பள்ளியில், மணற்கேணி மொபைல்செயலி குறித்து, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தமிழக அரசு சார்பில், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த மணற்கேணி என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியை அதிகளவு ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதற்காக, கோவை மாவட்டத்தில் உள்ள, 42 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணைய வழியில் கூட்டம் நடந்தது.
மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இணையதள கூட்டத்தின் அறிவுறுத்தல் படி, ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் மயிலாத்தாள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மணற்கேணி செயலி குறித்த விபரங்கள் முழுமையாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த செயலிக்கான க்யூ.ஆர்., கோடு பள்ளி வளாகத்தின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதனை ஸ்கேன் செய்து மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் கூறியதாவது:
மணற்கேணி செயலியில் வகுப்பு சார்ந்த பாடங்கள், வீடியோ பதிவாக உள்ளது. இதன் வாயிலாக, மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் பாடம் கற்பிக்க முடியும். மேலும், இதை பள்ளியில் உள்ள ஸ்மார்ட் போர்ட், கணினி போன்றவைகளில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
செயலியில், மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, 120 காணொலிகள் இதில் இடம் பெற்றுள்ளது. மாறிவரும் கற்றல் செயல்பாட்டில் புதிய தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப மாணவர்களை உட்படுத்தவும், மேம்படுத்தவும் உதவுகிறது.
பள்ளியில் நடத்தும் பாடம் சார்ந்த வீடியோ பதிவுகள், இதில் இருப்பதால் மாணவர்கள் மீண்டும் அந்த காணொலியை கண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு, கூறினார்.