தாய்மொழி காக்கும் முழக்கத்தை முன்னிறுத்துவோம்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தாய்மொழி காக்கும் முழக்கத்தை முன்னிறுத்துவோம்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்
UPDATED : பிப் 27, 2025 12:00 AM
ADDED : பிப் 27, 2025 04:30 PM
சென்னை:
வஞ்சகத்தை எதிர்க்கவும், வளமான தமிழகத்தை பாதுகாக்கவும், மாநில உரிமைக்கான குரலுடன் தாய்மொழி காத்திடும் முழக்கத்தை முன்னிறுத்துவோம் என, தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம்:
ரயில் நிலையங்களில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழித்து விட்டால், வட மாநில பயணியர், எப்படி ரயில் நிறுத்தங்களை அடையாளம் காண்பர்? என, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கேட்கின்றனர். அவர்களுடைய இந்த உணர்வு நியாயமாக தமிழ் மீதும் இருந்திருக்க வேண்டும்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரிடம், 'காசி தமிழ்ச் சங்கமம் நடத்துகிறீர்கள். கும்பமேளா நடக்கிறது; அதற்கு தமிழகம் மற்றும் தென் மாநிலங்களிலிருந்து இருந்து உ.பி., செல்லும் பயணியர் புரிந்து கொள்ளும் வகையில், தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளில் பெயர் பலகைகளை வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டிருக்க வேண்டும்.
பிறக்கும்போதே தாய்ப்பாலுடன் தமிழ்ப்பாலும் சேர்த்து ஊட்டப்பட்டவர்கள் நாம். இறக்கும் வரையில் தமிழ் உணர்வு அழியாது. தமிழை அழிக்க நினைப்பவர்களையும் விட மாட்டோம்.
சட்டத்தின் முன்பும், நீதியின் முன்பும் தாய்மொழி உணர்வை நிலைநாட்டி, தமிழைக் காப்போம். இரு மொழிக் கொள்கையால் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, திறன் மேம்பாடு, சிறப்பான வேலை வாய்ப்புகள் என, தமிழகம் இன்று உயர்ந்து நிற்கிறது.
தாழ்ந்த தமிழகத்தை நிமிர்த்தி உயர்த்தியது திராவிட இயக்கம். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் வஞ்சகத்தைத் தொடர்கிறது மத்திய அரசு. வஞ்சகத்தை எதிர்க்கவும், வளமான தமிழகத்தை பாதுகாக்கவும், மாநில உரிமைக்கான குரலுடன், தாய்மொழி காத்திடும் முழக்கத்தையும் முன்னிறுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.