அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றங்கள் மாணவர்களின் தனித்திறன் மேம்படும்
அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றங்கள் மாணவர்களின் தனித்திறன் மேம்படும்
UPDATED : ஆக 30, 2024 12:00 AM
ADDED : ஆக 30, 2024 10:38 AM
பொள்ளாச்சி :
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இலக்கிய மன்றங்கள் செயல் படுத்தப்படவுள்ளன.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களை ஒருங்கிணைத்து, ஆக்கப்பூர்வமான அறிவை மேம்படுத்தும் நோக்கில், இலக்கிய மன்றங்கள் செயல்பட உள்ளன. அவ்வகையில், ஒதுக்கப்பட்ட பாட இடைவேளைக்கு ஏற்ப, வரும் 2025ம் தேதி ஏப்., மாதம் வரை, வாராந்திர அடிப்படையில் மன்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாதத்தின் முதல் வாரம் பாடவேளையில் படித்த புத்தகங்களின் அடிப்படையில் எழுதுதல் மற்றும் பேசுதல். இரண்டாவது வாரம், தினசரி நாளிதழ்கள் மற்றும் இதழ்களின் கருப்பொருட்கள் குறித்து மாணவர்கள் விவாதித்து, வினாடி - வினா நடத்துதல், மூன்றாவது வாரம் திரைப்படங்களை வெளியிடுவது, நான்காவது வாரம் சுற்றுச்சூழல், கலை மற்றும் விளையாட்டு மன்றங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்தக்கல்வியாண்டில், பேச்சு, கட்டுரை, கவிதை எழுதுதல், திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் காட்டும் அறநெறிகள் குறித்து விவாதம், கதை சொல்லுதல், விவாத மேடை இலக்கிய உரை பேச்சு போன்ற மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் நிகழ்வுகள் வாரந்தோறும் இலக்கிய மன்ற நிகழ்வாக நடத்தப்படும்.
மன்ற செயல்பாடுகள் வாயிலாக அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, பாடத்திட்டத்தில் அல்லாத பிற தகவல்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு நடத்தப்படும். இதன் வாயிலாக, மாணவர்கள் பலர், மிகுந்த ஆர்வத்துடன் தகவல்களை நுாலகங்கள், வெளியிடங்களில் தேடிப்பிடித்து தன் திறமைகளை வெளிப்படுத்தி முன்வருவர்.
மனப்பாடம் செய்தல் தன்மையை குறைத்து, புரிந்து படிக்கும் தன்மையை அதிகரிக்கச் செய்யும். பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படவும் உள்ளது.
இவ்வாறு கூறினர்.