மனிதனை மேன்மையாக்குவது இலக்கியங்கள் தான்: இறையன்பு
மனிதனை மேன்மையாக்குவது இலக்கியங்கள் தான்: இறையன்பு
UPDATED : ஏப் 09, 2024 12:00 AM
ADDED : ஏப் 09, 2024 11:32 AM

சென்னை:
எழுத்தாளர் விக்கிரமனின், 96வது பிறந்த நாள் - இலக்கிய பீடம் இதழின் 28வது ஆண்டு விழா நிகழ்ச்சியில், மேற்கு மாம்பலத்தில் நடந்தது.
இதில், இலக்கிய பீடம் - சிவசங்கரி விருது, எழுத்தாளர் ஜெயா வெங்கட்ராமனுக்கும், மாம்பலம் சந்திரசேகர் - இலக்கிய பீடம் விக்கிரமன் விருது, பேராசிரியை கஸ்துாரி ராஜாவுக்கும் வழங்கப்பட்டது. மேலும், சிறுகதை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசளிப்பு விழாவும் நடந்தது.
பரிசு மற்றும் விருதுகளை வழங்கி, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசியதாவது:
எழுத்தாளர் விக்கிரமன், ஒரு பிதாமகன் போன்றவர். நான், கோவை வேளாண் பல்கலையில் படித்த போது, அனைத்து இதழ்களுக்கும் கவிதைகள் எழுதி அனுப்பியதுண்டு. ஆனால், என் கவிதையை முதலில், அமுதசுரபி இதழில் வெளியிட்டவர் விக்கிரமன் தான்.
அத்துடன், தொடர்ந்து எழுதவும் ஊக்கப்படுத்தினர். என் முதல் கவிதை தொகுப்பு, பூபாலத்திற்கு ஒரு புல்லாங்குழல் என்ற தலைப்பில், நுாலாக வெளியானபோது, அவர் தான் அணிந்துரை வழங்கினார்.
இதுபோல் எண்ணற்ற கவிஞர்களை உருவாக்கிய, விக்கிரமன் பெயரிலான விருதை வழங்குவதில், எனக்கு மகிழ்ச்சி; பெறுபவர்களுக்கும் பெருமை.
உலகின் பல மொழிகளில் முதல் படைப்பு கவிதையாகவே வெளியானது. காரணம், அப்போது காகிதம் கண்டுபிடிக்கப்படாததால், சொல் சிக்கனம் தேவைப்பட்டது.
தமிழில், மருத்துவத்துறை சார்ந்த நுால்கள் கூட கவிதையாகவே எழுதப்பட்டது. திருக்குறள் உள்ளிட்ட செய்யுள் வடிவில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில், சிறுகதைகளுக்கான கூறுகள் இருக்கும்.
நல்ல எழுத்துகள், வாசித்து முடித்ததும், வாசகனை சிறிது சிறிதாக சிந்திக்க வைத்து, செயல்பட வைக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் தான் மனிதனை மென்மை படுத்துவதோடு, அவன் வாழ்வை மேன்மையும் படுத்தும்.
இவ்வாறு, அவர் பேசினார்.