UPDATED : ஏப் 29, 2025 12:00 AM
ADDED : ஏப் 29, 2025 11:49 AM
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் மதரசா பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை என்பதை, ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் கண்டறிந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அங்கீகாரம் பெற்ற மதரசா பள்ளிகள் நடக்கின்றன. இஸ்லாம் தொடர்பான கல்வி நிறுவனமாக இருந்தாலும், மற்ற பள்ளிகளைப் போலவே இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்குள்ள பஹ்ரைச் மாவட்டத்தில் மட்டும், அங்கீகாரம் பெற்ற 301 மதரசாக்கள் உள்ளன. இது தவிர, அங்கீகாரமற்ற 495 மதரசா பள்ளிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி சஞ்சய் மிஸ்ரா தலைமையிலான அதிகாரிகள், மதரசா பள்ளிகளில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, படி டாக்கியா என்ற இடத்தில் செயல்படும் ஜாமியா காஜியா செய்யதுல் உலுாம் என்ற மதரசா பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்கள் ஒருவருக்குகூட அவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சஞ்சய் மிஸ்ரா கூறுகையில், மாணவர்களுக்கு தங்கள் பெயரையும், மதரசாவின் பெயரையும் ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை. வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டிருந்த எண்ணிக்கையைவிட, மிகக் குறைவான மாணவர்களே வகுப்புகளில் இருந்தனர். ஆசிரியர்கள் சிலரும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு வெளியில் சென்று விட்டனர். எனவே, கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதரசா நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது, என்றார்.

