மதுரை கல்வி அதிகாரிகள் கூடாரத்தில் எல்லாமே பொறுப்புதான்! கூடுதல் பணிச்சுமையால் திணறல்
மதுரை கல்வி அதிகாரிகள் கூடாரத்தில் எல்லாமே பொறுப்புதான்! கூடுதல் பணிச்சுமையால் திணறல்
UPDATED : செப் 13, 2024 12:00 AM
ADDED : செப் 13, 2024 10:15 AM

மதுரை:
மதுரையில் பெரும்பாலான கல்வி அதிகாரிகள் பதவிகள் காலியாக உள்ளன. அப்பதவிகளில் தலைமையாசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிப்பதால், பணிகள் தேங்குவதுடன், நிர்வாகமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை கல்வித்துறைக்கு இது போதாத காலமாக மாறியுள்ளது. தமுக்கம் மைதானத்தில் நடந்துவரும்புத்தக திருவிழாவில் நாட்டுப்புறப் பாடல்கள் கேட்டு பள்ளி மாணவிகள் சாமியாடியது, திட்டமிடல் இன்றி ஒரே நாளில் ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றதால் வெயிலில் காத்திருந்தது உள்ளிட்டவை வைரலாகி அதிகாரிகளுக்கு அடுத்தடுத்த நெருக்கடிகளை கொடுத்தன.
மேலும் அமைச்சர் உதயநிதி நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்கள் எண்ணிக்கை குறித்து கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்ட வெவ்வேறு புள்ளிவிவரங்களும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதன் சி.இ.ஓ.,க்கு கீழ் நிலையில் உள்ள சில முக்கிய பதவிகளில் தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சையும் எழுந்தது.
தற்போது இத்துறையின் உச்ச அதிகாரியான சி.இ.ஓ., கார்த்திகாவும் கள்ளக்குறிச்சிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு பதில் புதிய சி.இ.ஓ., நியமிக்கப்படவில்லை. மாறாக மேலுார் டி.இ.ஓ.,வுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஏற்கனவே மதுரை டி.இ.ஓ., தொடக்க கல்வி டி.இ.ஓ., மாநகராட்சி டி.இ.ஓ., என முக்கிய பதவிகள் நீண்ட நாட்களாக காலியாக கிடக்கின்றன. அங்கு தலைமையாசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் பள்ளி, அலுவலகப் பணிகளை கண்காணிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இந்நிலையில் சி.இ.ஓ., பதவியும் காலியாகிவிட்டது. சென்னையை அடுத்து முக்கிய மாவட்டமான மதுரைக்கு சி.இ.ஓ., இல்லாதது பெரும் துரதிருஷ்டம் என கல்வியாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.