மனிதனாக வாழ கம்பனின் எழுத்துக்களை படிக்கணும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பேச்சு
மனிதனாக வாழ கம்பனின் எழுத்துக்களை படிக்கணும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பேச்சு
UPDATED : அக் 28, 2024 12:00 AM
ADDED : அக் 28, 2024 12:53 PM
நாமக்கல்:
மனிதனாக நாம் வாழ வேண்டும் என்றால், கம்பனின் எழுத்துக்களை படிக்க வேண்டும், என கம்பர் விருது வழங்கும் விழாவில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பேசினார்.
கம்பன் கழகம் சார்பில், கம்பர் விருது, கம்பர் மாமணி விருது, துறைசார் வல்லுனர் விருதுகள், கம்பன் கழக போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, நாமக்கல்லில் நடந்தது. கம்பனின் வரங்கள், சாபங்கள் என்ற தலைப்பில், நுால் வெளியீட்டு விழா நடந்தது.
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:
நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், மகாதேவன், சுரேஷ்குமார் ஆகியோர் தமிழறிஞர்கள். நான் தமிழ் மீது பற்று கொண்டவன், அறிஞன் இல்லை. கம்பனை போற்றி பாடியவர் பாரதியார். பாரதியாரை பிடிக்கும் அனைவருக்கும் கம்பனையும் பிடிக்கும். கம்பராமாயணத்தில் சகோதரத்துவத்தை கம்பன் வலிமையாக வலியுறுத்துகிறார். காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் தெரிவித்த கருத்துகளை அப்போதே கம்பன் தெரிவித்து விட்டார். ராமரின் வாழ்க்கை மூலமாக, கம்பன் இந்த கருத்துக்களை தெரிவிக்கிறார். ராவணன் பல்வேறு சக்திகள் கொண்டவனாக இருந்த போதிலும், அவனுக்கு புலனடக்கம் இல்லாததால், அழிவை சந்திக்க நேரிட்டான். மனிதனாக நாம் வாழ வேண்டும் என்றால், கம்பனின் எழுத்துக்களை படிக்க வேண்டும். தற்போதைய நிலையில் தமிழின் நிலை சற்று கவலைக்கிடமாக இருக்கிறது. கம்பன் கழகம் மூலமாகவே, தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்.
கம்பன் கழக செயலாளர் அரசு பரமேசுவரன், தலைவர் சத்தியமூர்த்தி, திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், குருவாயூரப்பன், பொருளாளர் தில்லைசிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.