தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எதிர்ப்புக்கு பணிந்தது மஹா., அரசு: மும்மொழி கொள்கை தீர்மானம் ரத்து

எதிர்ப்புக்கு பணிந்தது மஹா., அரசு: மும்மொழி கொள்கை தீர்மானம் ரத்து

எதிர்ப்புக்கு பணிந்தது மஹா., அரசு: மும்மொழி கொள்கை தீர்மானம் ரத்து


UPDATED : ஜூலை 01, 2025 12:00 AM

ADDED : ஜூலை 01, 2025 01:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2025 12:00 AM ADDED : ஜூலை 01, 2025 01:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை:
மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதற்கான தீர்மானத்தை ரத்து செய்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், இந்த பிரச்னை குறித்து விவாதிக்க குழு ஒன்றை அமைத்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, மராத்தி மற்றும் ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை ஹிந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், மூன்றாவதாக வேறு ஒரு மொழியை கற்க விரும்பினால், அதற்கு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்றும், திருத்தப்பட்ட அரசாணையை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்


இது, ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 5ம் தேதி, கிர்காம் சவுபாட்டியில் இருந்து தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானம் வரை மாபெரும் பேரணிக்கு அங்குள்ள நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அழைப்பு விடுத்தார். 19 ஆண்டுகளாக பிரிந்திருந்த, உத்தவ் பால் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், அவர் அழைப்பை ஏற்று இந்த போராட்டத்தில் பங்கேற்க ஒப்புக் கொண்டார்.

பிற அரசியல் கட்சியினருக்கும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மராத்தி மொழி தொடர்பான பிரச்னையில் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் மொழி ஆலோசனைக் குழுவும், துவக்கப்பள்ளிகளில் ஹிந்தி உட்பட எந்த மூன்றாம் மொழியையும் மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடாது என்ற தீர்மானத்தை சமீபத்தில் நிறைவேற்றியது.

புனேவில் நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து மொழி ஆலோசனைக் குழு தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக் கூறுகையில், 'கடந்த 1999ல் மராத்தி வழிப் பள்ளிகளில் துவக்க வகுப்புகளுக்கு, ஆங்கிலம் கட்டாய பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு பின், ஆங்கிலவழிப் பள்ளிகளில் மராத்தி கட்டாயமாக்கப்பட்டது. இதன் விளைவாக, குழந்தைகளால் எந்த மொழியையும் சரியாக கற்றுக்கொள்ள முடியவில்லை.

குழு அமைக்க முடிவு


இப்போது, ஹிந்தி அல்லது வேறு எந்த மூன்றாம் மொழியையும், ஆரம்பத்தில் சேர்ப்பதன் வாயிலாக, குழந்தைகளில் மொழியியல் திறன்கள் மேலும் பலவீனமடையும். ஒரு ஆலோசனைக் குழுவாக, துவக்கப்பள்ளிகளில் மூன்றாம் மொழியை அறிமுகப்படுத்துவதை மாநில அரசு தவிர்க்க வேண்டும் என, தெரிவித்தார்.

இந்த சூழலில், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை தொடர்ந்து, மும்மொழி கொள்கை தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில அமைச்சரவை கூடி ஆலோசனை செய்தது.

கூட்டத்துக்கு பின் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:

மொழிகள் எந்தத் வகுப்புகளிலிருந்து செயல்படுத்தப்பட வேண்டும், எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு என்ன தேர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க டாக்டர் நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு இறுதி முடிவை எடுக்கும். அதுவரை, ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட இரண்டு அரசுத் தீர்மானங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்மொழிக் கொள்கை தீர்மானத்தை மாநில அரசு ரத்து செய்ததை அடுத்து, வரும் 5ம் தேதி நடத்தப்படவிருந்த மாபெரும் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தவ் பால்தாக்கரே சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us