மறு தேர்வில் மாணவர்களை வெற்றி பெற செய்வது... கட்டாயம்; சி.இ.ஓ., அறிவுறுத்தல்
மறு தேர்வில் மாணவர்களை வெற்றி பெற செய்வது... கட்டாயம்; சி.இ.ஓ., அறிவுறுத்தல்
UPDATED : மே 28, 2025 12:00 AM
ADDED : மே 28, 2025 10:30 AM

கள்ளக்குறிச்சி:
மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களை கட்டாயமாக மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கச்செய்துவெற்றிபெற வைக்க வேண்டியது, பள்ளி தலைமை ஆசிரியர்களின் கடமை என, மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். டி.இ.ஓ., ரேணுகோபால், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி முன்னிலை வகித்தார்.
சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் தண்டபாணி வரவேற்றார். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, நிதியுதவி, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாதிரி பள்ளிகளை சேர்ந்த, 164 பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், நடந்து முடிந்த பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களை கட்டாயமாக வரும் ஜூன், 26ல் நடக்கும் பிளஸ் 2; ஜூலை 4ல் நடக்கும், 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான மறுதேர்வில் பங்கேற்க வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர் கடமை
தோல்வி நிலையிலேயே, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் அடுத்த வகுப்புகளை தொடர அனுமதி இருப்பினும், நடக்க உள்ள மறு தேர்விலேயே அவர்களை பெற்றி பெற செய்ய வேண்டியது முக்கிய கடமை என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வரும் ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக, துாய்மைப்படுத்த வேண்டும். கழிவறைகள், சமையல் கூடங்கள், எலக்ட்ரிக் சாதனங்கள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்புக்கு தலைமை ஆசிரியர்களே பொறுப்பு.
மாணவர்களுக்கு பரிசு
கடந்தாண்டை விட கூடுதலாக, 50 மாணவர்கள் சேர்க்கை பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இடைநிற்றல் இருக்க கூடாது. பள்ளிகளில் திருக்குறள் முற்றோதல் மற்றும் நன்னெறி பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
திருக்குறள் முற்றோதலில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு, பசுமைப்பள்ளி நடவடிக்கைளை தொடர்ந்து நடத்த வேண்டும்.
பள்ளிகளில் புதிதாக சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தி திறன் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
இதில் குறைந்த திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி திறன் மேம்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா அறிவுறுத்தினார்.
சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.