UPDATED : மார் 17, 2025 12:00 AM
ADDED : மார் 17, 2025 08:33 AM
கோவை:
கோவை, துடியலுாரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் சூர்யகுமார்; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி கிருத்திகா, 41. தம்பதியின் மகன் ஜெயசூர்யா, 11; பள்ளி மாணவன்.
ஸ்ரீதர் சூர்யகுமாரின் கார் டிரைவர், திருப்பூர் மாவட்டம், முத்துார் ஆலம்பாளையத்தை சேர்ந்த நவீன், 25. இவர் நேற்று முன்தினம் சிறுவனை டியூஷன் சென்டரில் இருந்து அழைத்து வர சென்றார்.
இந்நிலையில், ஸ்ரீதருக்கு டிரைவர் போன் செய்து, ஜெயசூர்யாவை கடத்தி சென்றுள்ளதாகவும், 12 லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும், இல்லை எனில் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
துடியலுார் போலீசார் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டம், பவானி அருகே சிறுவனுடன் நவீன் இருப்பது தெரிந்தது. துடியலுார் போலீசார் தகவலில், ஈரோடு பவானி போலீசார் நவீனை கைது செய்து, கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீதரிடம், நவீன் ஏற்கனவே பணிபுரிந்து வந்ததும், அப்போது அவருக்கு ஊதியம் மற்றும் இடங்கள் விற்பனை செய்து கொடுத்ததற்கான கமிஷன் தொகை, 12 லட்சம் ரூபாயை தராததும் தெரியவந்தது.
அந்த பணத்தை தராததாலேயே அவரது மகனை கடத்தி, மிரட்டியது தெரியவந்துள்ளது. நவீனை போலீசார் சிறையில் அடைத்தனர்.