இயற்கைக்கு மனிதன் இழைத்த அநீதி! வான்மழை கருத்தரங்கில் வேதனை
இயற்கைக்கு மனிதன் இழைத்த அநீதி! வான்மழை கருத்தரங்கில் வேதனை
UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 11:30 AM

பல்லடம்:
இயற்கைக்கு இழைத்த அநீதி காரணமாக, இன்று படாத பாடுபட்டு வருகிறோம் என பல்லடத்தில் நடந்த வான் மழை கருத்தரங்கில் வேதனை தெரிவிக்கப்பட்டது.
பல்லடம், வனம் அமைப்பின் வான்மழை கருத்தரங்கம் வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது. அதன் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார்.
முன்னாள் காவல்துறை அரசு பணியாளர் தேர்வுக்குழு உறுப்பினர் ரத்தின சபாபதி பேசியதாவது:
ஒரு மரத்தின் வாழ்க்கை என்பது வாழ்வியலை கூறக்கூடியது. மரத்தின் ஒரு இலை உதிர்ந்தால் கூட, அது, பயிர் வளர்வதற்கான சக்தியை தருகிறது. மரங்கள் வீழ்ந்தாலும் அது நமக்கு கூரையாக பயன்படுகிறது.
இயற்கை என்பது ஒரு வரப்பிரசாதம். இதன் அருமை, பெருமையை உணராமல், மனிதன், அநீதி செய்து வருகிறான். மக்களுக்கு செய்யும் அநீதியை இயற்கைக்கும் செய்கிறான். அதனால், இன்று படாத பாடுபட்டு வருகிறோம். மனிதன் வாழக்கையை வாழ வேண்டும் என்றால், இயற்கை அழிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
ஆனால், மரங்கள் தரும் ஆக்சிஜன் இன்றி வாழ முடியாது என்று தெரிந்தும் அவை அழிக்கப்படுகின்றன. சமுதாயத்தில் மனிதனுக்கு முன்னேற்றம் தேவைதான். ஆனால், இதற்குமுன், சமுதாயத்துக்கு மனிதன் என்ன செய்தான் என்பதை யோசிக்க வேண்டும்.
எங்கு பார்த்தாலும் அநியாயம், ஊழல், அநீதி பெருகி வருகிறது. செய்த நன்றியை மறப்பவனுக்கு மன்னிப்பே இல்லை என்கிறார் வள்ளுவர். இப்படியிருக்க, நாமும், நம் குடும்பமும் சந்தோஷமாக இருக்க உதவும் இந்த சமுதாயத்துக்கு, நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, திருப்பூர் வித்யா விகாஸ் பள்ளி இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, ஓய்வு பெற்ற கல்லுாரி பேராசிரியர் கந்தசாமி சிறப்புரை ஆற்றினார்.