UPDATED : ஜன 21, 2025 12:00 AM
ADDED : ஜன 21, 2025 09:57 AM
பெங்களூரு:
சென்னை மணிமேகலை பிரசுரத்தின் புத்தக விற்பனை கண்காட்சி, பெங்களூரு தமிழ் சங்கத்தில் நடந்தது. புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
தினமலர் வாரமலர் அந்துமணியின் பார்த்தது, கேட்டது, படித்தது பாகம் - 23 புத்தகத்தை, தினமலர் நாளிதழ் பெங்களூரு பதிப்பின் மூத்த உதவி ஆசிரியர் ராமசுப்பிரமணியன் வெளியிட, காஞ்சிபுரம் ஆத்ம சங்கமம் சஞ்சீவி ராஜா சுவாமிகள் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் குமார் எழுதிய பொன்னியின் செல்வன் ஆங்கில புத்தகத்தை, நமிபியாவின் கவுரவ துாதர் அக்ஷய் துல்சியன் பெற்று கொண்டார்.
சஞ்சீவி ராஜா சுவாமிகள் பேசுகையில், தமிழ் என்றால் முருகன், முருகன் என்றால் தமிழ். தமிழை கற்றால் மட்டும் தான் வெற்றியாளராக வலம் வர முடியும். எல்லாருக்கும் எழுதும் வித்தை வராது. கடவுள் ஆசி கிடைப்பவர்களால் மட்டுமே எழுத முடியும். தமிழை காப்பாற்ற தொடர்ந்து எழுதுங்கள், என்றார்.
தமிழ்ச்சங்க துணை தலைவர் அமுதபாண்டியன், டீ, காபி என்ற வார்த்தையை தமிழில் தேநீர் என்று, தன் புத்தகத்தில் எழுதியவர் தமிழ்வாணன். படிப்பு தான் மனிதனை உயர்த்தும் என்று சொல்வர், என்றார்.
ஆடிட்டர் குருபிரசாத் பேசும்போது, நான் சென்னை சென்றிருந்த போது, மணிமேகலை பிரசுர புத்தக வெளியிட்டு விழாவை, பெங்களூரில் நடத்த உதவ வேண்டும் என்று ரவி தமிழ்வாணன் கேட்டு கொண்டார். அனைத்து உதவியும் செய்வதாக கூறினேன். தமிழர்கள் அதிகம் வருவர் என்று நம்பிக்கையுடன் கூறினேன், என்றார்.
மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியைகள் தாமரைசெல்வி மோகன், சரஸ்வதி, டாக்டர் பூரநேசன் ராஜூ, தங்கவயல் பேராசிரியர்கள் பரிமள சேகர், கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.