தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக் கல்விக்கு இன்னும் பல பாதைகள்

பள்ளிக் கல்விக்கு இன்னும் பல பாதைகள்

பள்ளிக் கல்விக்கு இன்னும் பல பாதைகள்


UPDATED : செப் 27, 2026 02:50 PM

ADDED : செப் 27, 2026 02:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 02:50 PM ADDED : செப் 27, 2026 02:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிக் கல்வி என்றாலே ஒரே மாதிரியான வகுப்பறை, ஒரே மாதிரியான பாடப்புத்தகம், ஒரே மாதிரியான தேர்வு என்ற நிலை இப்போது இல்லை. மாணவர்களின் தேவையும், குடும்பச் சூழலும், எதிர்காலத் திட்டங்களும் மாறுவதால், கல்வியைத் தொடர பல்வேறு பாதைகளும் உருவாகியுள்ளன.

மாநிலப் பாடத்திட்டம்


இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குகின்றன. அந்த மாநிலத்தின் மொழி, வரலாறு, புவியியல், பண்பாடு, சமூகச் சூழல் ஆகியவற்றுக்கு இதில் முக்கியத்துவம் இருக்கும்.

தமிழ்நாட்டின் மாநிலப் பாடத்திட்டத்திலும் தமிழ் மொழிக்கும், மாநிலத்தின் வரலாறு மற்றும் சமூகச் சூழலுக்கும் முக்கிய இடம் உள்ளது. மாநிலத்திலேயே உயர்கல்வியைத் தொடரத் திட்டமிடும் மாணவர்களுக்கு, தங்கள் சுற்றுச்சூழலுடன் நெருக்கமான கல்வி அனுபவத்தை இது வழங்குகிறது.

கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம்


உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் சர்வதேச கல்வி முறைகளில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டமும் ஒன்று. பாடங்களை மனப்பாடம் செய்வதைவிட, அவற்றைப் புரிந்துகொண்டு பயன்படுத்துதல், கேள்வி எழுப்புதல், ஆராய்தல் போன்ற திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

உயர்கல்வியை இந்தியாவுக்கு வெளியேயும் தொடர விரும்பும் மாணவர்கள், சர்வதேசப் பாடத்திட்டங்களைப் பற்றியும் பரிசீலிக்கலாம். ஆனால் பள்ளி வழங்கும் பாடங்கள், கட்டணம், கற்றல் முறை போன்றவற்றை முழுமையாகப் பார்த்த பிறகே முடிவு செய்வது அவசியம்.

ஐ.பி. கல்வி


ஐ.பி. (International Baccalaureate) கல்வி முறை, மாணவர்களை கேள்வி கேட்கவும், ஆராயவும், ஒரு விஷயத்தை பல கோணங்களில் சிந்திக்கவும் ஊக்குவிக்கிறது. புத்தகத்தில் உள்ள தகவலை மட்டும் தெரிந்துகொள்வதைவிட, அதை நிஜ வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

திட்டப்பணிகள், ஆய்வு, கருத்துப் பகிர்வு, சமூகச் செயல்பாடுகள் போன்ற அனுபவங்களும் கற்றலின் ஒரு பகுதியாக அமைகின்றன. இதனால் வகுப்பறைக் கல்வியைத் தாண்டி மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

என்.ஐ.ஓ.எஸ்.


வழக்கமான பள்ளி முறையில் தொடர்ந்து படிக்க முடியாத மாணவர்களுக்கும், தங்களுடைய சூழலுக்கு ஏற்ப நெகிழ்வான முறையில் கல்வியைத் தொடர விரும்புபவர்களுக்கும் என்.ஐ.ஓ.எஸ். (NIOS - National Institute of Open Schooling) ஒரு முக்கியமான வாய்ப்பாக உள்ளது.

படிப்புடன் வேலை, விளையாட்டு, கலை அல்லது வேறு பொறுப்புகளைச் சமாளிக்க வேண்டிய மாணவர்களுக்கும் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி உதவியாக இருக்கலாம். வழக்கமான பள்ளி நேர அமைப்புக்கு மாற்றாக, நெகிழ்வான கற்றல் வாய்ப்பை இது வழங்குகிறது.

தொழிற்கல்விப் பாதை


“படிப்பு என்றால் புத்தகத்தைப் படிப்பது மட்டும்தானா?” என்ற கேள்விக்கு இன்றைய கல்வி வேறொரு பதிலைத் தருகிறது. ஒரு தொழிலைச் செய்வதற்குத் தேவையான திறன்களையும் பள்ளிப் பருவத்திலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

கணினி, வடிவமைப்பு, சுகாதாரம், வணிகம், மின்னணுவியல், வேளாண்மை, சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடைய தொழிற்கல்விப் பாடங்கள் மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்குகின்றன. கற்ற அறிவைச் செயல்படுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்பும் இதில் அதிகம்.

பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வது எப்படி?


பாடத்திட்டத்தின் பெயரை மட்டும் பார்த்து முடிவு செய்வது சரியான அணுகுமுறை அல்ல. மாணவருக்கு என்ன பிடிக்கும், எப்படிக் கற்க விரும்புகிறார், எதிர்காலத்தில் என்ன படிக்க விரும்புகிறார், பள்ளியில் என்ன வசதிகள் உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு மாணவருக்கு ஆராய்ச்சி சார்ந்த கல்வி பிடிக்கலாம். இன்னொருவருக்கு நடைமுறைத் தொழில்திறன் பிடிக்கலாம். மற்றொருவருக்கு தன்னுடைய சூழலுடன் தொடர்புடைய மாநிலப் பாடத்திட்டம் பொருத்தமாக இருக்கலாம்.

கல்வியின் பாதைகள் பல. முக்கியமானது, எந்தப் பாதையைத் தேர்வு செய்தாலும் மாணவன் கேள்வி கேட்கவும், சிந்திக்கவும், செயல்படவும், தொடர்ந்து கற்றுக்கொள்ளவும் கற்றுக் கொள்வது தான்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us