இஸ்ரோ விஞ்ஞானிகளில் பலர் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள்
இஸ்ரோ விஞ்ஞானிகளில் பலர் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள்
UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 02:46 PM

திருநெல்வேலி:
இஸ்ரோ விஞ்ஞானிகளில் பலர் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள். எனவே தமிழ் வழி கல்வி முறை சிறந்தது என, திருநெல்வேலியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., பிறந்தநாளையொட்டி அவரது மணிமண்டபத்தில் சிலைக்கு மாலையணிவித்த சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக அரசின் பாடத்திட்டம் குறித்து கவர்னர் ரவி கருத்து தெரிவித்து உள்ளார். இத்தகைய தர்க்கமான முறையில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என பலமுறை அவரிடம் தெரிவித்துள்ளோம். தமிழக அரசின் பாடத்திட்டம் குறித்து அவருக்கு முழுமையாக தெரியுமா என தெரியவில்லை. அவர் சந்தேக கண்ணோடு பார்க்கிறாரா என்று தெரியவில்லை.
சந்திரயான் 3 திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் முக்கிய பொறுப்பு வகித்த வீரமுத்துவேல் தமிழ் வழி கல்வியில் பயின்றவர். இஸ்ரோ தலைவராக இருந்த கன்னியாகுமரியை சேர்ந்த சிவனும் தமிழ் வழியில் பயின்றவர். மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் தமிழ் வழி கல்வியில் பயின்றவர்கள். எனவே தமிழ் வழி கல்வி முறை சிறந்தது என்றார்.