மக்காத குப்பைக்கு மாற்றாக பொருட்கள்; மாணவரை ஊக்கப்படுத்தும் துப்புரவாளன்
மக்காத குப்பைக்கு மாற்றாக பொருட்கள்; மாணவரை ஊக்கப்படுத்தும் துப்புரவாளன்
UPDATED : நவ 20, 2024 12:00 AM
ADDED : நவ 20, 2024 11:40 AM
திருப்பூர்:
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, மு.ந.முருகப்ப செட்டியார் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர் சேகரித்து வழங்கிய மக்காத குப்பைகளுக்கு மாற்றாக, ஸ்டேஷனரி பொருட்கள் மாணவியருக்கு வழங்கப்பட்டது.
திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம், துப்புரவாளன் அமைப்பு, நகரின் பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் இப்பணியை மேற்கொண்டு வருகிறது.
முன்கூட்டியே பள்ளிக்கு சென்று மக்கும், மக்காத பிளாஸ்டிக் குறித்தும், அதற்கு மாற்றாக ஸ்டேஷ னரி பொருட்கள் வழங்குவது குறித்து மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த அமைப்பினர். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை அவர்களே வந்து பெற்றும் கொள்கின்றனர்.
துப்புரவாளன் அமைப்பு இயக்குனர் பத்மநாபன் கூறியதாவது:
எந்தெந்த வகையான குப்பைகளை எப்படி சேகரிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சியை முன்கூட்டியே மாணவ, மாணவியருக்கு அளிக்கிறோம். குப்பைகளை வீட்டில் சேகரித்த பின், பள்ளி நிர்வாகத்திடம் பேசி, ஒரு தேதி முடிவு செய்கிறோம்.
அந்நாளில் பள்ளிக்கு சென்று மாணவியரிடம் இருந்து குப்பைகளை பெற்று, அதற்குண்டான, நோட்டு, பேனா, பென்சில் உட்பட ஸ்டேஷனரி பொருட்களை அவர்களுக்கு வழங்குகிறோம்.
இதனால், குப்பை மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவியர் உணர்கின்றனர். ஒரு பொருளை வீசியெறியும் முன் யோசிப்பர். திருப்பூரில் பத்து பள்ளிகளில் இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.
நேற்று முருகப்ப செட்டியார் பள்ளியில், 200 மாணவியரிடம் இருந்து, 1,700 கிலோ குப்பை பெறப்பட்டு, எடைக்கு உண்டான மதிப்புக்கு (பிளாஸ்டிக் குப்பை கிலோ, ஐந்து ரூபாய், காகித குப்பை கிலோ, பத்து ரூபாய்) ஏற்ப, ஸ்டேஷனரி பொருட்கள் வழங்கப்பட்டது. மாணவியர் மட்டுமின்றி, பள்ளிகளிடமிருந்தும் குப்பைகளையும் இலவசமாக வாங்கி, மறுசுழற்சி செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.