UPDATED : செப் 17, 2024 12:00 AM
ADDED : செப் 17, 2024 08:42 PM
ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பான எம்.பி.பி.எஸ்., கற்றுத்தரப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறி உள்ளார்.
இந்தியாவில் அலுவல் மொழியாக ஹிந்தி ஏற்கப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோசாய் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
2022ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஹிந்தியில் மருத்துவக்கல்வியை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பத்தை தெரிவித்து இருந்தார். அவரது லட்சியத்தை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி. ஹிந்தி திவாஸ் எனப்படும் ஹிந்தி தினத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., படிப்பு ஹிந்தி மொழியில் கற்றுத் தரப்படும். அதற்கு என பிரத்யேக பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும். ஆங்கிலேய கல்வி முறையில் இருந்து மாற்றும் முயற்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஹிந்தி வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு இத்தகைய நடவடிக்கை பயன் உள்ளதாக இருக்கும். ஹிந்தியில் படிப்பதன் மூலம் ஆழமான புரிதலை வளர்த்து, நல்ல மருத்துவர்களாக அவர்கள் மேம்படுத்த உதவும்.
இவ்வாறு விஷ்ணு தியோசாய் கூறி உள்ளார்.