UPDATED : ஏப் 03, 2025 12:00 AM
ADDED : ஏப் 03, 2025 08:33 PM
புதுடில்லி:
உலகளாவிய ஊடக கண்காணிப்பு அமைப்பான, ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பு, உலகில் உள்ள முக்கிய நாடுகளின் ஊடகச் செயல்பாடுகளை பட்டியலிட்டு கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.
மொத்தம் 180 நாடுகள் அடங்கிய பட்டியலில், இந்தியா 159வது இடத்தில் உள்ளது. இது குறித்து, லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., சுதாகரன் நேற்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் முருகன் அளித்த பதில்:
அரசியலமைப்பு விதிகளை அமல்படுத்துவதை உறுதி செய்யும் ஒரு வலுவான நீதித்துறை அமைப்பு நம் நாட்டில் உள்ளது.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அரசியலமைப்பின் 19வது பிரிவின் கீழ் பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான இந்திய பத்திரிகை கவுன்சில், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து வரும் புகார்களுக்கு உரிய முறையில் தீர்ப்பளித்து வருகிறது.
எனவே, நம் நாட்டில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடக சுற்றுச்சூழல் அமைப்புள்ளது. இதற்கு, வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து சரிபார்ப்பு சான்றிதழ் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

