UPDATED : ஜூன் 29, 2026 01:02 PM
ADDED : ஜூன் 29, 2026 01:03 PM
மதுரை:
மதுரை மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் டீன் அருள் சுந்தரேஷ் குமார் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் கல்லாணை, கோபிசன் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது:
மதுரை மருத்துவக் கல்லுாரியில் சேர வேண்டும் என லட்சக்கணக்கான மாணவர்கள் கனவு காண்கின்றனர். இக்கல்லுாரியில் கிடைக்கும் அனுபவம் வேறு எங்கும் கிடைக்கப் போவதில்லை. மருத்துவம் படித்த பின் உடனே பிராக்டீஸ் தொடங்க நிறைய பேர் தயங்குகின்றனர். இன்னும் தயாராகவில்லை என்று சொல்கின்றனர்.
இப்போது மருத்துவம் படித்தவர்கள் உடனே முதுகலை படிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். தற்போது தனி கிளினிக்குகள் தொடங்க டாக்டர்கள் தயங்குவதால், மருத்துவத்துறை கார்ப்பரேட்டாக மாறிவிட்டது. தனியார் பல்நோக்கு மருத்துவமனைகள் பெருகிவிட்டன.
எல்லாத் தரப்பினரும் தனியாரில் சிகிச்சை எடுக்கப் போவதில்லை. கிராமங்களில் மருத்துவத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தன்னம்பிக்கையை இழக்காமல் பிராக்டீஸை தொடங்குவது முக்கியமானது என்றார்.
செனட் உறுப்பினர் டாக்டர் பீர்முகமது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் பிரபாகரன், துணை முதல்வர் சரவணன், டாக்டர்கள் பழனிக்குமார், செந்தில் பங்கேற்றனர். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
