UPDATED : ஏப் 05, 2025 12:00 AM
ADDED : ஏப் 05, 2025 09:49 AM
சென்னை:
தமிழக அரசின் சுற்றுலா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், இரண்டாவது மருத்துவ சுற்றுலா மாநாடு சென்னையில் துவங்கியது.
இரண்டு நாட்கள் நடக்கும் மாநட்டை, அமைச்சர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாநாட்டில், வங்கதேசம், எத்தியோப்பியா, இந்தோனேஷியா, கென்யா, மடகாஸ்கர், மொரீஷியஸ், நேபாளம், இலங்கை, துருக்கி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அத்துடன், மருத்துவர்கள், அயல்நாட்டு துாதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள் என, மேலும், 150 பேரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மருத்துவமனை பிரதிநிதிகள், தங்கள் மருத்துவமனைகளில் உள்ள சிகிச்சை முறைகள் மற்றும் வசதிகள் குறித்து நிகழ்ச்சியில் எடுத்துரைத்தனர்.
மாநாட்டில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
மருத்துவ சுற்றுலாவில், நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருவோரில், 25 சதவீதம் பேர் தமிழகத்திற்கு வருகின்றனர்.
இது, இங்குள்ள சிறப்பான மருத்துவ கட்டமைப்பினை உறுதி செய்கிறது. அதேபோல, குழந்தைகளை பாதிக்கும் நோய்களை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், தனியார் மற்றும் அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 1.50 கோடி மக்கள் காப்பீடு செய்து பயனடைந்து உள்ளனர். நாட்டிலேயே தனியார் மற்றும் அரசு மருத்துவமனை வழங்கும் காப்பீட்டு திட்டத்தில், அதிக குடும்பங்கள் காப்பீடு செய்து, சிகிச்சை பெற்று வரும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும், தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

