UPDATED : ஏப் 27, 2024 12:00 AM
ADDED : ஏப் 27, 2024 10:29 AM

திருநெல்வேலி:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் ஆர்.ரமேஷ், 51. உதவிப் பேராசிரியர் ஜெனிதா, 43. நேற்று முன்தினம் மாலை பல்கலை முடிந்ததும் ஜெனிதாவின் காரில், ரமேஷ் சென்றார்.
நாகர்கோவில் சாலையில் டக்கரம்மாள்புரம் அருகே ஜெனிதா வீடு முன் காரில் இருந்து இறங்கிய போது, ஏற்கனவே அங்கு டூ - வீலரில் வந்து காத்திருந்த மூன்று பேர், ஜெனிதாவை தாக்கினர்; ரமேஷையும் அந்த கும்பல் தாக்கியது.
மேலும், அவர்களிடம் இருந்து ஏ.டி.எம்., கார்டு மற்றும் மொபைல் போனை பறித்து அங்கிருந்து தப்பியது. தகவலறிந்த போலீசார் அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், 2009 -- 2010 கல்வி ஆண்டில், தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்க அனுமதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் பிரமுகர் சுடலைக்கண்ணு, இந்த விவகாரம் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
நீண்ட காலமாக விசாரிக்காமல் கிடந்த அந்த புகார் மீது மீண்டும் விசாரணை நடக்கிறது. எனவே, அதில் பாதிக்கப்படும் நபர்கள் கூலிப்படையை ஏவி இருக்கலாம் என தெரிகிறது.