மெட்ரோ ரயிலில் மாணவர்களுக்கு இலவசம்: தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ., அறிவிப்பு
மெட்ரோ ரயிலில் மாணவர்களுக்கு இலவசம்: தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ., அறிவிப்பு
UPDATED : ஜன 27, 2025 12:00 AM
ADDED : ஜன 27, 2025 09:22 AM
புதுடில்லி:
டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், மெட்ரோ ரயிலில் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் டில்லியில், சட்டசபை தேர்தல் பிப்., 5ம் தேதி நடக்கிறது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்து, கட்சி தலைவர்கள் வீடுவீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே இரண்டு தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிட்ட பா.ஜ., நேற்று மேலும் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, டில்லி தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குறுதிகளை நேற்று வெளியிட்டு பேசியதாவது:
பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், டில்லி மெட்ரோ ரயிலில் மாணவர்கள் ஆண்டுக்கு 4,000 ரூபாய் கட்டண மதிப்பில் இலவச பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும்.
டில்லி அரசில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். எந்த காரணத்தாலும் அவை நிறுத்தப்படாது. சபர்மதி நதிக்கரையைப் போல யமுனை நதிக்கரை மேம்படுத்தப்படும். துப்புரவு பணியாளர்கள் கைகளால் கழிவுகளை அகற்றும் நடைமுறை மாற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.