தமிழ் பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர்., பெயர் 'மிஸ்சிங்'
தமிழ் பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர்., பெயர் 'மிஸ்சிங்'
UPDATED : ஜன 03, 2026 11:33 AM
ADDED : ஜன 03, 2026 11:47 AM
தஞ்சாவூர்:
தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில், பல்கலைக்கழகத்தை துவக்கிய, எம்.ஜி.ஆர்., பெயர், படங்கள் இல்லாத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகம், 1981, செப்., 15ல், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழகத்திற்கு என இணையதளம் உள்ளது. இந்த இணைய தளத்தில் வரலாறு, நோக்கு, போக்கு, செயல் என்ற பகுதிகள் உள்ளன.
இதில், நோக்கு, போக்கு, செயல் பக்கத்தில் தமிழ் பல்கலைக்கழகம், 1981ம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாள் தோற்றுவிக்கப்பட்டது என குறிப்பிட்டு உள்ளது.
அதுபோல, வரலாறு என்ற பக்கத்தில் பல்கலைக்கழக துறைகள், செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. போட்டோ கேலரி பகுதியில் திருவள்ளூவர் படமும், பல்கலைக்கழக கட்டட படங்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளன.
ஆனால், பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர் மற்றும் படங்கள் எங்கும் இடம் பெறவில்லை. இது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
தமிழ் பல்கலைகழக இணையதளத்தில், எம்.ஜி.ஆரின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. எனவே, உடனே, பல்கலைக்கழக இணையதளத்தில் எம்.ஜி.ஆர்., பெயர், படங்கள் இடம் பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

