UPDATED : ஆக 11, 2025 12:00 AM
ADDED : ஆக 11, 2025 08:58 AM
திருப்பூர்:
தகவல் தொழில்நுட்ப துறையில், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், மாநிலத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ள நகரங்களில், மினி டைடல் பார்க் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, திருப்பூர், சேலம், தஞ்சை, துாத்துக்குடி, வேலுார் உள்ளிட்ட இடங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த, 2022 மார்ச் மாதம், அப்போதைய நிதி அமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், திருமுருகன்பூண்டியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில், 1.7 ஏக்கர் நிலத்தில், மினி டைடல் பார்க்க அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது கட்டுமானப்பணி முடிந்து, திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தை, வரும், 11ம் தேதி திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்ஸிங் வாயிலாக திறந்து வைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கட்டட கட்டுமான மற்றும் பிற பணிகள் இரவு, பகலாக மேற்கொள்ளப்பட்டன.
அதிகாரிகள் கூறுகையில், மொத்தம், 39.44 கோடி ரூபாய் செலவில், நிலத்தடி, தரைத்தளம் உட்பட, 8 அடுக்கு கட்டடமாக டைடல் பார்க் உருவெடுத்துள்ளது. ஏழு நிறுவனங்கள் செயல்படும் வகையில் வடிவமைப்பு உள்ளது. 600 பேர் வரை அமர்ந்து பணிபுரிவதற்குரிய உட்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. பிற பணியாளர்கள் என, 1,000 பேர் வரை வளாகத்தை பயன்படுத்த முடியும், என்றனர்.

