ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதாக புகார் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு
ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதாக புகார் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு
UPDATED : செப் 16, 2024 12:00 AM
ADDED : செப் 16, 2024 09:01 AM
வில்லியனுார்:
பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் திடீர் ஆய்வு செய்தார்.
வில்லியனுார் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகள் உள்ளது.
இந்த பள்ளிகளில் தினமும் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதாக தொகுதி எம்.எல்.ஏ.,வும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான சாய் சரவணன்குமாருக்கு பெற்றோர்கள் சார்பில் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் காலை பிள்ளையார்குப்பம் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக்குச் அமைச்சர் சாய்சரவணன்குமார் திடீர் ஆய்வு செய்தார். அப்போது துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த தலா இரு ஆசிரியர்கள் என நான்கு ஆசிரியர்களை தாமதமாக வந்ததற்கு விளக்கம்கேட்டார்.
பள்ளி காலை 9:15 மணிக்கு துவங்கும் பிரேயருக்கு முன்னாள் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும். அப்போது தான் மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவார்கள். என அறிவுரை கூறினார்.
மேலும் பள்ளி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பணிக்கு வராமல் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என ஆய்வு செய்தார். ஆசிரியர்கள் முன் மாதிரியாக இருந்து சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்து, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அமைச்சர் திடீர் ஆய்வு பணி சம்பவம், பள்ளி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.