ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
UPDATED : பிப் 13, 2025 12:00 AM
ADDED : பிப் 13, 2025 09:18 AM
புதுச்சேரி:
மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளவே, பள்ளிகளை சி.பி.எஸ்.இ., க்கு மாற்றியுள்ளதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில், பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் நடந்த மாணவர்களுக்கான பரிக்ஷா பே சர்ச்சா விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:
தேர்வு நேரத்தில், மாணவர்களுக்கு படபடப்பு வருவது சகஜமானது. பிரதமர் தெரிவித்த ஆலோசனைப்படி, அதை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும். மனம் மற்றும் உடல் ரீதியாக மாணவர்கள் நன்றாக இருந்தால் தான், தேர்விலும் வெற்றி பெற முடியும். மாணவர்கள் இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நமது அரசு, கல்வித்துறைக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கிடு செய்து, திட்டங்களை காலத்தோடு கொடுத்து வருகிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோர்களின் எதிர்பார்பை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் நிலவிய ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கும் விதமாக, தற்போது படிப்படியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில், டி.இ.டி., ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி ஆணை வழங்கப்படும்.
இன்றைய சூழலில், பள்ளிகள் மூலம் அதிக போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அவசியம். அதற்காகவே தான், ஒரே நேரத்தில் அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.இ.,யாக மாற்றியுள்ளோம்.
கடந்த வாரம், கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கான முன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த முன்மாதிரி தேர்வில் 80 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்றார்.