UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:21 AM

சென்னை:
மருத்துவ பரிசோதனை உபகரணங்களின் மதிப்பீட்டு திறன் பராமரிப்புக்கு, நடமாடும் மையத்தை சென்னை ஐ.ஐ.டி. அறிமுகம் செய்துள்ளது.
உடல்நலன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன், அவர்களுக்கு ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், எக்ஸ்ரே, இ.சி.ஜி., போன்றவை மேற்கொள்ளப்படும். இதற்கு நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவ பரிசோதனைகளின் முடிவை, தொழில்நுட்ப கருவிகளின் வழியே மதிப்பிட்டு அறிக்கை வழங்கப்படும். இந்த கருவிகளின் பயன்பாடு அதிகரிக்கும் போது, அதை முறையாக பராமரிக்காவிட்டால், மதிப்பீடுகள் துல்லியமாக இருக்காது. அதனால், சிகிச்சை அளிக்கும் முறையில் தவறுகள் ஏற்படும்.
எனவே, குறிப்பிட்ட கால இடைவேளையில், மருத்துவ பரிசோதனை கருவிகளின் செயல்பாட்டை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும். இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, கிராமப்புற மற்றும் புறநகர் பரிசோதனை மையங்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதை போக்கும் வகையில், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில், மருத்துவ பரிசோதனை கருவிகளின் பராமரிப்பு பணியை, அந்த இடத்திலேயே உடனடியாக முடித்து கொடுக்க, சென்னை ஐ.ஐ.டி., சார்பில் நடமாடும் மையம் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறுகையில், புறநகர் பகுதி மக்களுக்கும் மருத்துவ பரிசோதனை தடையின்றி கிடைக்கும் வகையில், நடமாடும் மையம் வழியே கருவிகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள, இந்த நடமாடும் மையம் உதவுகிறது என்றார்.