UPDATED : நவ 23, 2024 12:00 AM
ADDED : நவ 23, 2024 11:03 AM

திருப்பூர்:
ஒரு நல்ல விஷயத்துக்கான மாற்றம், முதலில் அவரவரிடம் இருந்து துவங்க வேண்டும்' என்பார்கள். அது ஒரு நல்ல துவக்கமாக மட்டுமில்லாமல், அதை மற்றவர்களும் பின்பற்ற ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதே அதன் அர்த்தம்.
அவ்வகையில், திருப்பூர் புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கான மாற்றத்தை நோக்கிய ஒரு பயணத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றனர். இப்பள்ளியில் தற்போது, 323 குழந்தைகள் படிக்கின்றனர். 1 முதல், 5 வகுப்பு வரையிலான இப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கை என்பது, தரையும், அதன் மீது போடப்பட்டுள்ள விரிப்புமாக தான் இருந்திருக்கிறது.
நவீனத்தை நோக்கிய கல்வியில், மாணவர்களின் இருக்கை முதற்கொண்டு, கரும்பலகை வரை அனைத்திலும் புதுமை புகுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, முதற்கட்டமாக, முதல் வகுப்பு குழந்தைகளின் பயன்பாட்டுக்கு, வண்ண, வண்ண மேஜை, நாற்காலிகளை வாங்கி, குழந்தைகளின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர். இதற்கென பள்ளி நிதி, 20 ஆயிரம் ரூபாய், ஆசிரியர்களின் சொந்த நிதி, 30 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளனர்.
அவற்றை குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) மோகன் வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், தலைமை வகித்தார்.
பள்ளி வளர்ச்சிக்குழு பொறுப்பாளர் கார்த்திகேயன், பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் துரைஅரசன் நன்றி கூறினார்.