100க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடல்; ஆதிதிராவிடர் நலத்துறையில் அவலம்
100க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடல்; ஆதிதிராவிடர் நலத்துறையில் அவலம்
UPDATED : டிச 15, 2025 10:22 PM
ADDED : டிச 15, 2025 10:25 PM
சென்னை:
ஆதிதிராவிடர் நலத்துறையில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகள் மூடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும், 1,331 சமூக நீதி விடுதிகளில், 65,000 மாணவ - மாணவியர் தங்கி படிக்கின்றனர். ஆனால், உணவு சரியில்லாதது, போதிய வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால், சில ஆண்டுகளாக, விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது. விடுதிகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட 98,000 மாணவர்களில், தற்போது, 65,000 பேர் தங்கி உள்ளனர்.
அதுவும், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மாணவர்கள் எண்ணிக்கை, 80,000 ஆக இருந்தது. தற்போதைய தி.மு.க., ஆட்சியில், 65,000 ஆக குறைந்துள்ளது. இதனால், மாணவர்கள் சேர்க்கை இல்லாத விடுதிகள், குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள விடுதிகள் போன்றவற்றை அதிகாரிகள் மூடி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் வரை, 51 விடுதிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது, மூடப்பட்ட விடுதிகளின் எண்ணிக்கை, 100ஐ தாண்டியுள்ளது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்க மாநில பொதுச்செயலர் சங்கரசபாபதி கூறியதாவது:
ஆதிதிராவிடர் நல விடுதிகள் துவக்கப்பட்ட நோக்கத்தை மறந்து, உணவுப்படி, முடி திருத்தும் கூலி என, அனைத்து நலத்திட்டங்களிலும், அதிகாரிகள் கைவரிசை காட்டி வருகின்றனர்.
இதுவே மாணவர்கள் சேர்க்கை குறைய காரணமாகும். பொதுவாக, மாணவர்கள் இல்லாத விடுதிகளை நேரில் ஆய்வு செய்து, சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது தான், அதிகாரிகளின் கடமை. அதற்கு மாறாக, தற்போது விடுதிகளை மூடுவதில் தான், ஆர்வமாக உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் வரை, கோவை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா, 10 விடுதிகள் உட்பட, 51 சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், துறை சார்பில், 1,200 விடுதிகள் மட்டுமே செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பது வேதனையாக உள்ளது.
இதே நிலைமை நீடித்தால், எதிர்காலத்தில் விடுதிகளின் நிலை கேள்விக்குறியாகி விடும். எனவே, அரசு தலையிட்டு, விடுதிகள் தொடர்ந்து இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

