நாளந்தா பல்கலை., புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: 17 நாடு தூதர்கள் பங்கேற்பு
நாளந்தா பல்கலை., புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: 17 நாடு தூதர்கள் பங்கேற்பு
UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM
ADDED : ஜூன் 20, 2024 10:36 PM
பாட்னா:
பீஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை நேற்று (ஜூன் 19) பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், 17 நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பீஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் ரூ.1700 கோடி மதிப்பில் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை ஜூன் 19 பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், 17 நாடுகளின் தூதர்கள், பல்கலை., பேராசிரியர் அபய் குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்கலை., பேராசியர்களுடன் பிரதமர் மோடி குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். பின்னர் அவர், பல்கலை., வளாகத்தில் மரக்கன்றை நட்டார்.
இது தொடர்பாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாளந்தா பல்கலை., நமது புகழ்பெற்ற கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக நீண்ட தூரம் செல்லும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வரலாறு
விழாவில் பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் பேசியதாவது:
பிரதமர் மோடியை நான் வரவேற்கிறேன். அவருக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. பழைய நாளந்தா பல்கலைக்கழகத்தில் சுமார் பல ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்றனர். சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் பணி புரிந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
நவீன முறை
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
அறிவு மற்றும் கல்விக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாற வேண்டும். இன்று, 23 ஐஐடிகள் உள்ளன. நாட்டில் 13 ஐஐஎம்கள் மட்டுமே இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. நாளந்தா பல்கலைக்கழகம் என்பது இந்திய வரலாற்றின் மறுமலர்ச்சி மட்டுமல்ல, பல ஆசிய நாடுகளின் பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் இந்த புதிய வளாகத்தில், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இளைஞர்கள் கல்வி கற்க வருகிறார்கள். நவீன முறையில் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.