UPDATED : ஜூன் 30, 2026 09:41 AM
ADDED : ஜூன் 30, 2026 09:42 AM
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் செயல்படும், 'ஐ.பி.ஆர்.சி.,' எனப்படும் 'இஸ்ரோ' உந்துவிசை வளாகத்தின் புதிய இயக்குநராக நாராயணன் அப்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, ஐ.பி.ஆர்.சி.,யின் இணை இயக்குநராகவும், சிறப்பு விஞ்ஞானியாகவும் பணியாற்றும் இவர், ஜூலை 1-ல் இயக்குநராக பொறுப்பேற்கிறார். ஜூன் 30-ல் ஓய்வு பெறும் தற்போதைய இயக்குநர் ஜே.ஆசீர் பாக்கியராஜுக்கு மாற்றாக, இந்த நியமனத்தை இஸ்ரோ அறிவித்துள்ளது.
சென்னை கிண்டி பொறியியல் கல்லுாரியில் இயந்திர பொறியியல் பட்டம் பெற்ற நாராயணன் அப்பு, 1989-ல் மகேந்திரகிரி இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். 'கிரையோஜெனிக் ராக்கெட்' உந்துவிசை தொழில்நுட்ப மேம்பாட்டில் முக்கிய பங்காற்றினார்.
மகேந்திரகிரியில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் இயந்திர சோதனை மையமான 'ஐ.சி.இ.டி.,' 2026 டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை, ஐ.பி.ஆர்.சி., இயக்குநர் பொறுப்புடன், ஐ.சி.இ.டி., திட்ட இயக்குநர் பொறுப்பையும் நாராயணன் அப்பு கூடுதலாக கவனிப்பார்.
