UPDATED : டிச 12, 2025 07:58 AM
ADDED : டிச 12, 2025 07:59 AM
புதுச்சேரி:
சேலம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவையொட்டி, பல்துறை ஆராய்ச்சியில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த இரண்டு நாள் தேசிய அறிவியல் மாநாடு நடந்தது.
புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் நடந்த மாநாட்டில், பல்கலைக்கழக பதிவாளர் நாகப்பன் வரவேற்றார்.
துணை வேந்தர் சுதிர் தலைமை தாங்கி, ஸ்டான்போர்ட் மற்றும் எம்.ஐ.டி., போன்ற பல்கலைக்கழகங்கள் அவற்றின் வலுவான கல்வித் தளத்தால் மட்டுமல்ல, அவை மேற்கொள்ளும் ஆராய்ச்சியின் அளவு மற்றும் தரத்தாலும் சிறந்து விளங்குகின்றன. பல சமகால சமூக சவால்களை பல்துறை ஆராய்ச்சி அணுகுமுறை மூலம் மட்டுமே எதிர்கொள்ள முடியும்' என்றார்.
பெங்களூரு, இந்திய அறிவியல் நிறுவனத்தின் முன்னா ள் இயக்குநர் பத்ம பூஷண் பலராம் கலந்து கொண்டு பல்துறை அணுகுமுறைகள், பல்வேறு துறைகளில் உயிரியல் அறிவியல் எவ்வாறு முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது துறைகளை கடந்து, பலதுறைகளில் ஆராய்ச்சியைத் தொடர வேண்டுமென பேசினார்.
மாநாட்டில் புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியில் அதிநவீன தலைப்புகளில் உரையாற்றினர். சுமார் 150 வாய்மொழி மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டு, சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

