செயற்கை நுண்ணறிவு, சட்டம் மற்றும் ஒழுங்குமுறை குறித்த தேசிய கருத்தரங்கு
செயற்கை நுண்ணறிவு, சட்டம் மற்றும் ஒழுங்குமுறை குறித்த தேசிய கருத்தரங்கு
UPDATED : ஏப் 03, 2026 07:54 PM
ADDED : ஏப் 03, 2026 07:55 PM

விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஓர் அங்கமான விநாயகா மிஷன் சட்டக் கல்லூரி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நீதி கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, சட்டம், ஒழுங்குமுறைகள் குறித்த தேசிய கருத்தரங்கை சென்னையில் நடத்தியது.
ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளி, ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் மற்றும் சிரில் ஷெராப் சென்டர் பார் ஏ.ஐ., லா அண்ட் ரெகுலேஷன் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில், எச்.சி.எல்., டெக் கேரியர் ஷேப்பர் நிறுவனம் திறன் மேம்பாட்டுப் பங்காளராகப் பங்கேற்றது.
இந்த நிகழ்வைத் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் இணைய வழியில் தொடங்கி வைத்துத் தனது முதன்மை உரையை ஆற்றினார்.
அவர் தனது உரையில், நிர்வாகம் மற்றும் பொதுச் சேவை வழங்கலில் செயற்கை நுண்ணறிவின் புரட்சிகரமான பங்கினை எடுத்துரைத்ததோடு, நெறிமுறை சார்ந்த பொறுப்புடைமையை உறுதி செய்யும் சமச்சீரான ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் அவசியத்தையும், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு இது எவ்வாறு உந்துசக்தியாக இருக்கும் என்பதையும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற தொடக்க அமர்வில், வி.எம்.எல்.எஸ்., வழிகாட்டுத் குழுத் தலைவர் டாக்டர் ஏ. பிரான்சிஸ் ஜூலியன் அறிமுக உரையாற்றினார். ஓ.பி., ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் சி. ராஜ் குமார் மற்றும் ஹவாய் உச்சநீதிமன்ற முன்னாள் நீதி அரசர் மைக்கேல் வில்சன் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிர்வாகத்தின் உலகளாவிய மற்றும் நீதித்துறை பரிமாணங்கள் குறித்து உரையாற்றினர்.
மேலும், பேராசிரியர் ஆர். பத்மநாப ராமானுஜம் ஆராய்ச்சி சார்ந்த ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். வி.எம்.ஆர்.எப்., - டி.யு.,வின் தலைமை யுக்திசார் அதிகாரி ஜே. சுரேஷ் சாமுவேல் வரவேற்றார். வி.எம்.எல்.எஸ்.,யின் நிர்வாகத் தலைவர் சித்தார்த் ராஜா 'தொழில்நுட்பத்தின் வாயிலாக நீதி வழங்கும் மையம்' குறித்து அறிமுகப்படுத்தினார்.
கருத்தரங்கின் பல்வேறு அமர்வுகளில், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு ஒரு தொழில்நுட்பக் கருவியிலிருந்து போர்முறை, ராஜதந்திரம் மற்றும் பொருளாதாரப் போட்டியைத் தீர்மானிக்கும் உத்திசார் கருவியாக மாறியுள்ளது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஒழுங்குமுறை மாதிரிகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் தகவமைப்பு மாதிரியானது ஒரு நடுநிலைப் பாதையாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும், சட்டக் கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்தல், முன்கணிப்பு வழிமுறைகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் மாணவர்களுக்குப் பகுப்பாய்வுத் திறன்களை வளர்த்தல் போன்ற தேவைகள் குறித்து வல்லுநர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.
எச்.சி.எல்., டெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் தனது சிறப்புரையில், கல்விசார் கற்றலை நிஜ உலகத் தொழில் தேவைகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வி.எம்.ஆர்.எப்., - டி.யு.,வின் வேந்தர் டாக்டர் ஏ.எஸ். கணேசன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் அனுராதா கணேசன் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இக்கருத்தரங்கம், பன்முகத் துறைசார் ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஈடுபாடுகளை வளர்ப்பதில் வி.எம்.எல்.எஸ்., கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. உதவிப் பேராசிரியர் சின்ஜினி சென் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.
