ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை நடத்த தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை நடத்த தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
UPDATED : ஜன 08, 2025 12:00 AM
ADDED : ஜன 08, 2025 09:23 AM

திண்டுக்கல் :
தடையின்மை சான்று பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அலகு விட்டு அலகு, துறை மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்திட வேண்டும் என தமிழக அரசை தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் அவரவரின் விருப்பம் மற்றும் குடும்பச்சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு,துறை மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.
பள்ளிக்கல்வியிலிருந்து தொடக்கக்கல்வித்துறை, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்புத்துறை, ஆதிதிராவிட நலத்துறை மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு பணியிட மாறுதலில் ஆசிரியர்கள் செல்லலாம்.
கலந்தாய்வை உடனடியாக நடத்திட தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது :
அலகு விட்டு அலகு, துறை மாறுதலுக்கு பள்ளிக்கல்விதுறை இயக்குனரிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். அதன்படி பலர் தடையின்மை சான்று பெற்று பல்வேறு மாவட்டங்களில் காத்திருக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்து விட்டது.
ஆனால் இரண்டு கல்வி ஆண்டுகளாக நடைபெற்ற அலகு விட்டு அலகு மாறுதலில் செல்லும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நடப்பு கல்வியாண்டில் தற்போது வரை நடக்கவில்லை.
ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும், சொந்த மாவட்டத்திற்கோ, விரும்பும் துறை சார்ந்த பள்ளிக்கோ சென்றால் கற்பித்தலில் கூடுதல் கவனம் இருக்கும் என்றார்.

