வேளாண் பல்கலை., மாணவியருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி
வேளாண் பல்கலை., மாணவியருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி
UPDATED : பிப் 06, 2026 01:39 PM
ADDED : பிப் 06, 2026 01:43 PM

உடுமலை: வாளவாடி கிராமத்திலுள்ள, இயற்கை வேளாண்மை பண்ணையில், கோவை வேளாண் பல்கலை., மாணவியர் களப்பயணம் வந்து, தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
உடுமலை அருகே வாளவாடி கிராமத்தில், இயற்கை வேளாண்மை பண்ணை அமைந்துள்ளது. இப்பண்ணைக்கு, நேற்று கோவை வேளாண் பல்கலை., மாணவியர் களப்பயணம் வந்தனர். அவர்களுக்கு பண்ணை உரிமையாளர் செல்வராஜ், இயற்கை வேளாண் முறைகள் குறித்து விளக்கமளித்தார்.
ஜீவாமிர்தம், மீன் அமினோ அமிலம், எருக்குக்கரைசல், வேப்பெண்ணெய், புங்கன் எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் போன்ற இயற்கை வேளாண்மை இடுபொருட்களை தயாரிக்கும் முறைகள் குறித்து, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
'மாடுகளின் சாணம், கோமியம் மற்றும் ஆடுகளின் கழிவுகள் போன்றவை, பயனுள்ள நுண்ணுயிர்களை அதிகரித்து மண் வளத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன; அவை இயற்கை வேளாண்மையின் அடிப்படை கூறுகளாக செயல்படுகின்றன,' என விளக்கமளிக்கப்பட்டது.
தேங்காய் மற்றும் நெற்பயிர்களில் இயற்கை வேளாண்மை முறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகள் குறித்து மாணவியர் கேட்டறிந்தனர்.

