நேர்முக தேர்வில் எதிர்மறை எண்ணம் வேண்டாம் என்.சி.சி., மாணவியருக்கு அட்வைஸ்
நேர்முக தேர்வில் எதிர்மறை எண்ணம் வேண்டாம் என்.சி.சி., மாணவியருக்கு அட்வைஸ்
UPDATED : மே 23, 2024 12:00 AM
ADDED : மே 23, 2024 10:27 AM

குன்னுார்:
எஸ்.எஸ்.பி தேர்வுக்கு பங்கேற்கும் என்.சி.சி. மாணவியர் எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு, கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் பயமின்றி பதில் அளித்தால் வெற்றி நிச்சயம், என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கேத்தி சி.எஸ்.ஐ., கல்லுாரியில் மாணவியருக்கான தேசிய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாம் கடந்த, 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் சிறப்பு கலந்துரையாடல் அமர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், தமிழகம். புதுவை,அந்தமான், நிக்கோபார் என்.சி.சி., கமாண்டர் அதுல்குமார் ரஸ்தோகி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், இந்திய ஆயுதப்படைகளின் அதிகாரி பணியிடங்களுக்கு, சர்வீஸ் செலக்சன் போர்டு ( எஸ்.எஸ்.பி.) மூலம் தேர்வு நடக்கிறது.
அதில், ஆளுமை, நுண்ணறிவு, சோதனைகள் மற்றும் நேர்காணல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்பீட்டு முறையில் தேர்வு நடக்கும்.
என்.சி.சி.யில் பங்கேற்று சான்றிதழ் பெற்றவர்களுக்கு, இந்த தேர்வில் உடல் தகுதி தேர்வு இல்லாமல், நேர்முக தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த நேர்முக தேர்விற்கு பங்கேற்கும் மாணவியர் எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் பயமின்றி பதில் அளித்தால் வெற்றி நிச்சயம் என்றார்.
முகாமில், தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்ச தீவ், கோவா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இரு பிரிவுகளாக மாணவியர் பங்கேற்றனர்.
இன்று முகாம் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவை என்.சி.சி., தலைமையக கமாண்டர் குழுவினர் செய்துள்ளனர்.