நீட் தேர்வு மாவட்டத்தில் 1,293 மாணவ, மாணவியர் பங்கேற்பு
நீட் தேர்வு மாவட்டத்தில் 1,293 மாணவ, மாணவியர் பங்கேற்பு
UPDATED : ஜூன் 22, 2026 06:35 PM
ADDED : ஜூன் 22, 2026 06:36 PM
கரூர்:
கரூர் மாவட்டத்தில், ஐந்து மைங்களில் நடந்த, 'நீட்' தேர்வில், 1,293 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர உதவும் இந்தாண்டிற்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு, கடந்த மாதம், 3ல் நடத்தப்பட்டது. என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வை, 22 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். தேர்வுக்கு முன்னரே, வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்ததை அடுத்து, இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கான பலத்த பாதுகாப்புடன் மறுதேர்வு, நடந்தது.
கரூர் மாவட்டத்தில், ஐந்து மையங்களில், 1,733 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். இதில், கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், இரண்டு மையங்களில், 730 பேர்; கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 184 பேர்; கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில், 70 பேர்; கரூர் பசுபதிபாளையம் சாரதா பெண்கள் மேல்நிலை பள்ளியில், 309 பேர் என, மொத்தம், 1,293 பேர் தேர்வெழுதினர். இதில், 440 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு மையத்துக்குள், மதியம், 1:30 மணி வரை மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு எழுத வருகை தந்த மாணவர்கள், கடுமையான சோதனைகளுக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 2:00 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை, 5:15 மணி வரை நடந்தது.
வீட்டில் இருந்து தேர்வுக்கூடத்துக்கு செல்லும் போது ஹால் டிக்கெட், அடையாள அட்டை, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தண்ணீர் தேவையென்றால் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
மொபைல், டேப்லெட், ஸ்மார்ட் கைகடிகாரம் போன்றவை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பேனா கூட எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வுக்கான பிரத்யேக பேனா, தேர்வு அறையில் வழங்கப்பட்டது.
எஸ்.பி., ஆய்வு
கரூர் மாவட்டத்தில், அரசு கலைக்கல்லுாரி உள்பட, ஐந்து மையங்களில், 'நீட்' நுழைவுத்தேர்வு நடந்தது. அதற்காக, ஐந்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கரூர் அரசு கலைக் கல்லுாரியில், அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
