நீட் தேர்வு: ஏழை மாணவர்களுக்கான வரப்பிரசாதம்: சாதித்த மாணவர்களின் பெற்றோர் நெகிழ்ச்சி
நீட் தேர்வு: ஏழை மாணவர்களுக்கான வரப்பிரசாதம்: சாதித்த மாணவர்களின் பெற்றோர் நெகிழ்ச்சி
UPDATED : ஜூலை 28, 2026 06:38 PM
ADDED : ஜூலை 28, 2026 06:40 PM
திருப்பூர்:
இடுவம்பாளையம் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், அவர்களின் பெற்றோரின் 'நீட்' தேர்வு குறித்த கருத்து:
'நீட்' முறை தொடர வேண்டும்...
சுப்பிரமணி: 'எங்கள் பிள்ளைக்கு மருத்துவராக வேண்டும்' என்பதுதான் நீண்ட நாள் ஆசை. 'நீட்' தேர்வு இருப்பதால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. முதல் முறை தேர்வெழுதி தோல்வியடைந்தாலும், மீண்டும் முயன்று இரண்டாம் முறையில் வெற்றி பெற 'நீட்' முறை தான் வாய்ப்பளித்தது. பல்வேறு சூழல்களால் ஒரு மாணவரால், 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் போகலாம்.
அதற்காக அம்மாணவர் மருத்துவப் படிப்பிற்குத் தகுதியற்றவர் என்று எப்படி முடிவு செய்ய முடியும்? அதே மாணவரால் 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிகிறது அல்லவா? ஐ.ஏ.எஸ்., காவல்துறை, ரயில்வே, வங்கி போன்ற அனைத்துத் துறைகளுக்கான வேலை வாய்ப்புகளும் போட்டித் தேர்வுகள் மூலமே நிரப்பப்படுகின்றன; அதே முறையில்தான் 'நீட்' தேர்வும் நடக்கிறது. எனவே, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் 'நீட்' தேர்வு முறை நிச்சயமாகத் தொடர வேண்டும்.
படிப்பு... படிப்பு... படிப்பு
சம்பத், சரண்யா தம்பதி: எங்கள் குடும்பத்திலேயே, 12ம் வகுப்பைத் தாண்டிப் படித்த முதல் பட்டதாரி எங்கள் மகள்தான். மகளின் இந்தச் சாதனைக்கு அவரின் தீவிர உழைப்பே முதன்மைக் காரணம்.
தினமும் அதிகாலை 4:00 மணிக்கே பயிற்சி வகுப்பிற்கு அழைத்துச் சென்றுவிடுவோம். இரவு, 11:00 மணி வரை வகுப்புகள் நடக்கும். நள்ளிரவு, 12:00 மணிக்கு வீடு திரும்பினாலும், மீண்டும் அதிகாலை, 4:00 மணிக்கு எழுந்து படிக்கத் தொடங்கி விடுவார்.
கடந்த ஒரு வருடமாக அவர் காட்டிய தீவிரமான பயிற்சியும் வெறியும்தான் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கி உள்ளது.எங்களைப் போன்ற எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 'நீட்' போன்ற தேர்வுகள் மிக அவசியமான ஒன்றாகும்.
'நீட்' தேர்வு இல்லையென்றால், வசதி படைத்தவர்கள் மட்டுமே அதிக பணம் கொடுத்து மருத்துவ இடங்களை பெறும் நிலை ஏற்படும். ஆனால், 'நீட்' தேர்வு இருக்கும் பட்சத்தில், கஷ்டப்பட்டுப் படிக்கும் ஏழை மாணவர்களும் தங்களது திறமையின் அடிப்படையில் மருத்துவராக முடியும்.
