துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு ஏற்க முடியாது
துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு ஏற்க முடியாது
UPDATED : ஜன 27, 2026 10:18 AM
ADDED : ஜன 27, 2026 10:20 AM

'அலைடு ஹெல்த்' எனப்படும் துணைமருத்துவ படிப்புகளுக்கும் 'நீட்' தேர்வு கட்டாயம் என்ற தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.ஏ.எச்.பி.,) அறிவிப்பை ஏற்க முடியாது, என தமிழ்நாடு அரசு பிசியோதெரபிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் படிப்புகள் அனைத்திற்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2ல் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுக்க முடியும். நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்களின் அடுத்த கட்ட மருத்துவ கனவாக துணை மருத்துவ படிப்புகள் உதவுகின்றன.
பி.எஸ்சி., பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, மருத்துவஆய்வகத் தொழில்நுட்பம், ரேடியாலஜி, ஆப்டோமெட்ரி, டயாலிசிஸ் உட்பட 56 வகை படிப்புகள் துணை மருத்துவ படிப்புகளாக கற்பிக்கப்படுகின்றன.
2023ல் நர்சிங் படிப்பையும் நீட் தேர்வின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்ட போது 'இது மாநில திட்டத்திற்கானது' என்று தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததால் நர்சிங் படிப்பு சேர்க்கப்படவில்லை. தற்போது 2026 - 27 கல்வியாண்டு முதல் பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி உட்பட பல்வேறு துணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டதற்கு தமிழ்நாடு அரசு பிசியோதெரபிஸ்டுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
டாக்டராக முடியாத கிராமப் புற, அரசுப்பள்ளி மாணவர்களின் அடுத்தகட்ட கனவாக துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. துணை மருத்துவ படிப்புகளை தேர்ந்தெடுப்போரில் 90 சதவீதம் பேர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான். பிளஸ் 2ல் நல்ல மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லுாரிகளில் தகுதி அடிப்படையில் இப்படிப்பில் சேர்கின்றனர்.
இதற்கும் தேசிய அளவில் நீட்தேர்வு தேவையென்றால் தனிப்பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும். பணம் கட்டி பயிற்சி பெற முடியாத கிராமப்புற, ஏழை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த படிப்பையும் படிக்க முடியாது. டாக்டர்களுக்கு உதவியாக சேவை செய்யும் இப்படிப்புக்கு நீட் தேர்வு அவசியமில்லை. என்.சி.ஏ.எச்.பி., இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றனர்.

