மாநகராட்சி சார்பில் நீட் இலவச பயிற்சி மையம் விரைவில் துவக்கம்; எம்.பி., ராஜ்குமார் தகவல்
மாநகராட்சி சார்பில் நீட் இலவச பயிற்சி மையம் விரைவில் துவக்கம்; எம்.பி., ராஜ்குமார் தகவல்
UPDATED : செப் 12, 2024 12:00 AM
ADDED : செப் 12, 2024 09:34 AM

கோவை: கோவை மாநகராட்சி சார்பில் ஆசிரியர் தின விழா, ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார் வரவேற்றார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுக்கொடுத்த, 236 ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி மட்டுமின்றி யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்விக்கு தேவையான வசதிகள் செய்ய மாமன்றம் ஒத்துழைப்பு அளித்து வருகிறது, என்றார்.
கோவை எம்.பி.,ராஜ்குமார் பேசுகையில், தனியார் பள்ளிகளை காட்டிலும், மாநகராட்சி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. தேவையான வசதிகள் செய்து கொடுக்க மாமன்றம் தயாராக இருக்கிறது. சிறப்பு வகுப்புகள் நடத்துவதன் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்திருக்கிறது.
விரைவில் நீட் தேர்வு இலவச பயிற்சி மையம் துவங்க இருக்கிறது. நீட் தேர்வு மட்டுமின்றி, உயர்கல்வி கற்பதற்கான பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. அதற்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னையை விட கோவை, அதிகமாக சாதித்துக் காட்ட வேண்டும், என்றார்.
விழாவில், மாநகராட்சி கல்வி அலுவலர் (பொ) குணசேகரன், மண்டல தலைவர்கள் தெய்வயானை, மீனா, லக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.