UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM
ADDED : ஜூலை 08, 2024 04:37 PM

புதுடில்லி:
நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எந்தளவு கசிந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மே 5 ல் நடந்த நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று ( ஜூலை 08) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒட்டு மொத்தமாக நீட் தேர்வு முடிவுகளையே ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் மே 5ம் தேதி தேர்வு நடக்கிறது. ஜூன் 14ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்படுகிறது. ஆனால், 10 நாட்களுக்கு முன்பாகவே ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றனர், என வாதிட்டனர்.
இதனையடுத்து தலைமை நீதிபதி சந்திரசூட், கருணை மதிப்பெண்களால் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். இவர்களை தவிர இந்த கருணை மதிப்பெண்களால் பலனடைந்தவர்கள் எத்தனை பேர் என கேள்வி எழுப்பியதுடன், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்பு கொள்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் மற்றும் பிறர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது மதிப்பெண்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து தலைமை நீதிபதி, நீட் தேர்வுகளை வெளிநாடுகளிலும் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நீட் வினாத்தாள்கள் எவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது என கேட்டபோது தூதரகங்கள் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது என தேசிய தேர்வுகள் முகமை பதிலளித்தது. தூதரகங்களுக்கு எவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, அது குறித்து விசாரித்து கூறுவதாக தேசிய தேர்வுகள் முகமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
தொடர்ந்து சந்திரசூட் கூறுகையில், நீட் விவகாரத்தில் நீட் தேர்வின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது. நீட் வினாத்தாள் கசிந்தது என்பது நடந்த ஒன்று. சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் இந்த வினாத்தாள் கசிவு என்பது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வாட்ஸ் ஆப், டெலிகிராம் போன்றவற்றில் இவை கசிந்திருக்கிறது என்றால் அது காட்டு தீ போல பரவி இருக்கும். இது 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம். நீட் தேர்வு கசிவு மற்றும் நீட் தேர்வு நடக்கும் நேரம் ஆகியவற்றிற்கு இடையே கால நேரம் ஒத்துப் போகிறது என்றால் அதை நாங்கள் தீவிரமாக விசாரிக்க போகிறோம்.
நீட் தேர்வு வினாத்தாள்கள் எப்போது தயாரிக்கப்படுகின்றது ? அது எப்போது அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றது ? எப்போது அச்சிடப்படுகின்றது? அச்சிடப்பட்ட பிறகு எப்போது அது தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது? போன்ற அனைத்து விவரங்களையும் தேதி வாரியாக அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.