'நீட்' மறு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு உடுமலையில் நடக்கிறது
'நீட்' மறு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு உடுமலையில் நடக்கிறது
UPDATED : மே 26, 2026 05:25 PM
ADDED : மே 26, 2026 05:27 PM
உடுமலை:
'நீட் மறுதேர்வுக்கான நீட் பயிற்சி வகுப்பு, வரும் ஜூன், 11ம் தேதி வரை நடைபெறும். ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் பங்கேற்று பயன் அடையலாம்,' என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் இணைய, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மே, 3ல் நாடு முழுதும் நீட் தேர்வு நடந்தது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் விஸ்வரூபமானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஜூன், 21ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படுமென தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
'இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை; விண்ணப்பம் கட்டணம் இல்லை. ஏற்கனவே விண்ணப்பித்ததே போதுமானது,' என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகும் மனநிலைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் வந்துள்ளனர்.
இவர்களில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, மீண்டும் நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நீட் மறுதேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
ஒவ்வொரு மையத்திலும் அனுபவம் மிக்க நான்கு ஆசிரியர், ஒரு பொறுப்பு ஆசிரியர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு 'நீட்' தேர்வு குறித்து பாடம் நடத்துவர்.
'நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு, அரசு உதவி பெறும் மாணவ, மாணவியர் இப்பயிற்சி மையத்தில் இணைந்து நீட் மறுதேர்வுக்கு தயாராகலாம்,' என, மாவட்ட கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
