நீட் மறுதேர்வு சற்று கடினம்; மாணவ மாணவியர் வருத்தம்
நீட் மறுதேர்வு சற்று கடினம்; மாணவ மாணவியர் வருத்தம்
UPDATED : ஜூன் 22, 2026 10:57 AM
ADDED : ஜூன் 22, 2026 11:01 AM

சென்னை:
'வினாத்தாள் கசிவு விவகாரத்தால் ரத்து செய்யப்பட்ட, 'நீட்' தேர்வை விட, நேற்று நடந்த 'நீட்' தேர்வு சற்று கடினமாக இருந்தது' என, மாணவ மாணவியர் தெரிவித்தனர்.
நாடு முழுதும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.
சற்று கடினம்
அந்த வகையில் நடப்பாண்டுக்கான, 'நீட்' தேர்வு, மே, 3ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு, நாடு முழுதும், 22.79 லட்சம், தமிழகத்தில், 1.42 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர். திட்டமிட்டபடி, மே 3ம் தேதி, 'நீட்' தேர்வு நடந்தது. அந்த தேர்வு, சற்று கடினமாக இருந்ததாக, மாணவ மாணவியர் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், தேர்வுக்கு முன்பாகவே, 'நீட்' தேர்வு வினாத்தாள் ராஜஸ்தானில் கசிந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், வினாத்தாள் கசிவு உண்மை என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, மே, 3ல் நடத்தப்பட்ட 'நீட்' தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ரத்து செய்தது. மறுதேர்வு நடைபெறும் என்றும் அறிவித்தது.
பலத்த சோதனை
அதன்படி, நாடு முழுதும், 551 நகரங்களில், 'நீட்' மறுதேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட, 307 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்க, மாணவ, மாணவியர் காலை 11:00 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைகளுக்கு பின், தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சரியாக, 01:30 மணியளவில், தேர்வு மையங்களின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. தேர்வு மதியம், 02:00க்கு தொடங்கி, மாலை 05:15 மணி வரை நடந்தது. தேர்வு அறையில் இருந்து மாலை, 05:30 மணியளவில், மாணவ மாணவியர் வெளியே வந்தனர்.
நுழைவாயிலில் காத்திருந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை முத்தமிட்டு வரவேற்றனர். சில மாணவர்கள் அழுதபடியே தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்தனர்.
மதிப்பெண்
அவர்களை பெற்றோர் தேற்றி அழைத்துச் சென்றனர். நேற்று நடந்த, 'நீட்' மறுதேர்வு, மே 3ம் தேதி நடந்த தேர்வை விட சற்று கடினமாகவே இருந்தது என, மாணவ மாணவியர் தெரிவித்தனர்.
இது குறித்து, வேளச்சேரியை சேர்ந்த மாணவர் புவனேஷ்வர் கூறுகையில், 'நீட் தேர்வில் கடந்த முறை, உயிரியல் பாட வினாக்கள் எளிமையாக இருந்தன. தற்போது, அவையும், வேதியியல் வினாக்களும் கடினமாகவே இருந்தன. மே 3ல், நான் எழுதிய நீட் தேர்வை விட, தற்போது சற்று கடினமாகவே இருந்தது. மதிப்பெண்ணும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது,' என்றார்.
குமணன்சாவடியை சேர்ந்த மாணவி மதுமிதா கூறுகையில், 'கடந்த முறையை விட, தற்போது தேர்வு சற்று கடினமாகவே இருந்தது. உயிரியல் வினாக்கள் எளிமையாக இருந்தன. ஆனால், இயற்பியல் வினாக்கள் கடினமாக இருந்தன,' என்றார்.
3 பேருக்கு அனுமதி மறுப்பு
சென்னையில், 43 மையங்களில், 'நீட்' தேர்வு நடந்தது. சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லுாரியில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, பகல் 1:30 மணிக்கு மேல் வருகை தந்த, ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவியருக்கு, தேர்வு மைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். மாணவர்களின் பெற்றோர், அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தும், தாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது என, திட்டவட்டமாக கூறிவிட்டனர். அந்த மாணவர்கள், அழுதபடியே திரும்பி சென்றனர்.
