நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி
UPDATED : ஜூலை 17, 2026 08:58 PM
ADDED : ஜூலை 17, 2026 08:59 PM
சென்னை:
'நீட்' நுழைவுத் தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின. மொத்தம் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுதும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடக்கிறது. நடப்பாண்டுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு, கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்தது. இதில், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மே 3ம் தேதி நடந்த 'நீட்' நுழைவுத் தேர்வு, ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுதும் 551 நகரங்களில், 5,440 மையங்களில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். முந்தைய தேர்வை விட, தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 'நீட்' தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில், 11.21 லட்சம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியானா மாநிலத்தை பன்சூல் பன்சால் ஆகிய மாணவர்கள், 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். மொத்தம் 138 மாணவர்கள், 720 மதிப்பெண் முதல் 690 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த தேர்வில், 58 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில், 19 மாணவர்கள், 700 மதிப்பெண்கள்; 1,492 மாணவர்கள், 650 மதிப்பெண்களுக்கு மேல்; 10,160 மாணவர்கள், 600 மதிப்பெண்களுக்கு மேல்; 90,780 மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 93 சதவீதம் பேர், முதல் முறை எழுதியவர்கள். தேர்வில் முதல் 17 பேர், 705க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இவர்கள் தமிழகம் உட்பட, எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
