நெட் தேர்வு முடிவு வெளியீடு; உதவி பேராசிரியர் பணிக்கு 50,145 பேர் தகுதி
நெட் தேர்வு முடிவு வெளியீடு; உதவி பேராசிரியர் பணிக்கு 50,145 பேர் தகுதி
UPDATED : ஆக 30, 2026 11:19 AM
ADDED : ஆக 30, 2026 11:21 AM

சென்னை:
பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., 'நெட்' தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 50,145 பேர், உதவி பேராசிரியராக பணியாற்ற தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில், உதவி பேராசிரியராக பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறவும், யு.ஜி.சி., 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
அதே போல், பிஎச்.டி., மாணவர் சேர்க்கையும், யு.ஜி.சி., நெட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான நெட் தேர்வு, ஜூன் 22 முதல் ஜூலை 5 வரை நடந்தது. 6 லட்சத்து, 7,151 மாணவ, மாணவியர் எழுதினர்; முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன.
இதில், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறவும், உதவி பேராசிரியராக பணியாற்றவும், 4,241 பேர் தகுதி பெற்றுள்ளனர். உதவிப் பேராசிரியர் மற்றும் பிஎச்.டி., சேர, 45,904 பேர் தகுதி பெற்றுள்ளனர். பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கு மட்டும், 97,434 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
வினாத்தாள் பிழை காரணமாக, ரத்து செய்யப்பட்ட ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு, வரும் செப்., 9, 10ம் தேதிகளில் நடக்கும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
