அரசு பள்ளிகளில் நெட்வொர்க் சேவை கட்; ஸ்மார்ட் வகுப்பறை துவக்குவதில் சிக்கல்
அரசு பள்ளிகளில் நெட்வொர்க் சேவை கட்; ஸ்மார்ட் வகுப்பறை துவக்குவதில் சிக்கல்
UPDATED : ஜூலை 02, 2025 12:00 AM
ADDED : ஜூலை 02, 2025 09:31 AM

உடுமலை:
அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல்., இணைய சேவை, ஒரு மாத காலமாக நெட்வொர்க் இல்லாமல் செயல்படாமல் உள்ளது.
மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், ஏற்கனவே கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் உயர்தரமாக மாற்றப்பட்டு, தற்போது அவற்றில் பல்வேறு செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் அடுத்தகட்டமாக, அரசு துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளும், நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர ஆய்வககங்களும் அமைக்கப்படுகிறது.
கடந்த 2023-24 கல்வியாண்டின் இறுதியிலிருந்து, இதற்கான பணிகள் ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அதற்கான தனி வகுப்பறை வசதிகள், இணைய சேவை மற்றும் தற்போது தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட பணிகள் கூட, இன்னும் சில பள்ளிகளில் நிறைவு பெறாமல் உள்ளது.
கடைக்கோடி கிராமப்பகுதிகள் மற்றும் தொலைதுாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில், பி.எஸ்.என்.எல்., சேவை பெறுவது தொடர்ந்து சிக்கலாகவே உள்ளது.
மற்ற நெட்வொர்க் சேவை பெறுவதற்கும், கல்வித்துறை அனுமதி வழங்காமல் இருப்பதால் அப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைக்கான தகுதி இருந்தும், செயல்படுத்துவதற்கான வாய்ப்பில்லாமல் உள்ளது.
கடந்த ஒரு மாதமாக, 50 சதவீத பள்ளிகளில் பி.எஸ்.என்.எல்., சேவையும் முழுமையான நெட்வொர்க் கிடைக்காமல் செயல்பாடில்லாமல் உள்ளது.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகான பி.எஸ்.என்.எல்., இணைய சேவைக்கு, கடந்த ஒரு மாதமாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இதுகுறித்து புகார் அளித்தாலும், எந்த பதிலும் இல்லை.
அதேபோல் கடந்த இரண்டு மாதங்களாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திலிருந்து இணைய சேவைக்கான கட்டணம் செலுத்தவில்லை என, தலைமையாசிரியர்களுக்கு குறுந்தகவல் வந்துகொண்டிருக்கிறது. இதனால் சேவை துண்டிக்கப்பட்டு விட்டதா என்பதும் தெரியவில்லை. இப்பகுதி மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் பல கிராமங்களில் இதே பிரச்னைதான் உள்ளது.
கல்வித்துறை இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்துகிறது. அவர்கள் பள்ளிகளுக்கு முறையாக பதில் கூறுவதில்லை. இதே நிலைதான் கடந்த ஒருமாத காலமாக நடக்கிறது. இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை கல்வித்துறை அரசிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு கூறினர்.