நெடுஞ்சாலையோர பள்ளிகள் அனுமதி பெற புது சலுகை; வீட்டுவசதி துறை நடவடிக்கை
நெடுஞ்சாலையோர பள்ளிகள் அனுமதி பெற புது சலுகை; வீட்டுவசதி துறை நடவடிக்கை
UPDATED : செப் 03, 2025 12:00 AM
ADDED : செப் 03, 2025 07:14 PM
சென்னை:
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதிகளில், 22 அடி அகல, 'சர்வீஸ்' சாலைக்கு இடம் ஒதுக்கினால், பள்ளி கட்டடங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்துள்ளது.
தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி, தனியார் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. புதிதாகவும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில், பள்ளி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதில், சில இடங்களில் அனுமதியின்றி, பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை வரன்முறைப்படுத்த, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரச்னை உருவாகிறது
போக்குவரத்து நெரிசல் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய நிலத்தில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, ஒப்புதல் மறுக்கப்படுகிறது. பள்ளி வளாகங்களுக்கு ஒரே சமயத்தில், அதிக வாகனங்கள் வந்து செல்வதால், பிரச்னை உருவாகிறது. இதுபோன்ற வளாகங்களில், புதிய கட்டடங்கள் கட்ட அனுமதிப்பதிலும், பிரச்னை ஏற்படுகிறது.
எனினும், தங்கள் கட்டடங்களுக்கு அனுமதி கோரி, பள்ளி நிர்வாகங்கள் அரசிடம் முறையிட்டுள்ளன.இதையடுத்து, பள்ளி கட்டடங்களுக்கு, புதிய சலுகை வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள சில கட்டடங்களுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதுபோன்ற பள்ளிகளுக்கு, விதிமுறைகளில் சில சலுகைகள் வழங்க முடிவு செய்திருக்கிறோம். அதன்படி, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய பள்ளிகளின் நிர்வாகங்கள், தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை, 'சர்வீஸ்' சாலை அமைக்க ஒதுக்கிக் கொடுத்தால், கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
தடை இருக்காது
நெடுஞ்சாலையில் இரு ந்து, பள்ளி வாகனங்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும், உரிய வசதிகளுடன், 22 அடி அகலத்துக்கு, 'சர்வீஸ்' சாலைக்கு இடம் கொடுக்க வேண்டும். இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு, எவ்வித தடையும் ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும்.
நெடுஞ்சாலையையு ம், சர்வீஸ் சாலையையும், பிரித்து காட்ட, தடுப்புகள் அமைக்க வேண்டும்.
இதேபோன்று, நீர் நிலைகளை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில், பள்ளி கட்டடங்கள் கட்டுவதிலும் பிரச்னை ஏற்படுகிறது. இத்தகைய நில உரிமையாளர்கள், நீர் நிலைகளை ஒட்டிய பக்கத்தில், முழு நீளத்துக்கு, எவ்வித திறப்பும் இன்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
இவ்வாறு கட்டினால் கட்டட அனுமதி வழங்கப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.